இலங்கை சிறையில் வாடிய தமிழக 38 மீனவர்கள் சர்வதேச எல்லையில் இன்று ஒப்படைப்பு… உறவினர் மகிழ்ச்சி
இலங்கை சிறையில் வாடிய தமிழகத்தைச் சேர்ந்த 38 மீனவர்கள் சர்வதேச எல்லையில் இன்று ஒப்படைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காரைக்கால்: இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேர் இன்று சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த மாதம் 6ம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைக் கண்டித்தும், இனி இதுபோல் நடக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், மத்திய அரசு மீனவர்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் என்று கோரியும் 11 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

சிறை பிடிப்பு
இந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வந்த பின்னர், ராமேநாதபுரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 38 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

மீனவர்கள் குமுறல்
தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதற்கு மீனவர்கள் குமுறினார்கள். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

விடுவிப்பு
இந்நிலையில், மார்ச் 31ம் தேதி யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 பேரும், வவுனியா சிறையில் இருந்து 8 பேரும் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனர். நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

ஒப்படைப்பு
இதனையடுத்து, 38 மீனவர்களையும் காரைக்கால் பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை அரசு ஒப்படைக்கிறது. இதனால் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவர்கள் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோரிக்கை
இதுதவிர, நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை அரசின் வசம் உள்ளன. அவை அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications