12 தமிழக மீனவர்களுக்கு தலா 1.5 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு.. என்ன நடந்தது
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை சிறை பிடித்த 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் செலுத்த முடியவில்லை என்றால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகவே இருக்கிறது.

இதைத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்கிறது. அதன்படி கடந்த ஆக. 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
கைது: அதாவது தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் அந்தோணி மகாராஜா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக சொல்லி இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அவர்களைக் கைது செய்தனர். அவர்கள் மீது மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தது, தடை செய்யப்பட்ட படகு & வலைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அபராதம்: இது தொடர்பாக அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அயோனா விமலரத்ன, 12 மீனவர்களுக்கும் தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் 42 லட்சம்) அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
ஒரு வேலை அபராத தொகையைச் செலுத்த முடியவில்லை என்றால் ஒவ்வொரு மீனவரும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மீனவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை இலங்கை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபராதத்தை ரத்து செய்து இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications