இலங்கை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய அம்மாவுக்கு நன்றி: வேல்முருகன்
சென்னை: இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்த கோரி தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு உலகத் தமிழர்களின் நன்றி என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழக சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உலகத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
சிங்களப் பேரினவாத அரசுகளால் இனப்படுகொலைக்குள்ளாகி, சர்வதேச நாடுகளால் ஈவிரக்கமின்றி கைவிடப்பட்ட ஈழத் தமிழினத்துக்கு எப்போதும் ஒருதுணையாக இருப்போம் என்ற உறுதிமொழியை தமிழக அரசும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களும் இன்று மீண்டும் நிறைவேற்றி உலகத் தமிழருக்கு பேராறுதலை அளித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த கொடுங்கோலர்களை போர்க்குற்றவாளிகளாக பிரகடனப்படுத்த வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; தனித் தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத்தில் இன்று மீண்டும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இதனை இந்திய அரசு ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று ஏற்கனவே அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் ஐ.நாவுக்கு, நெருக்கடி கொடுத்து, சர்வதேச விசாரணைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்.
ஒரு லட்சியத்தை பெறுவதற்கு, எத்தைகய தியாகத்தையும் செய்ய வேண்டும் என்றும் நினைப்பது சாதாரணம் என்று கூறிய, பேரறிஞர் அண்ணாவின் அமுத மொழிக்கு ஏற்ப, தமிழகத்தின் லட்சியத்துக்கும், இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்திற்கு ஏற்பவும், இலங்கை போரின்போது சர்வதேச சட்டம், ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி, போர்குற்றங்கள் நடத்திய அனைவர் மீதும், சர்வதேச விசாரணை நடத்த இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும்..
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது தெரிந்தால் இந்தியா, ராஜதந்திர ரீதியில் அமெரிக்காவை தன்பக்கம் இழுத்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று, இந்திய பேரரசை, தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றுமொரு தீர்மானத்தை தமிழகத்தின் அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார்.
தமிழக சட்டமன்றம் ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானங்களை சிறிதும் மதிக்காமல் இருக்கும் இந்தியப் பேரரசே! தமிழக சட்டமன்றத்தின் இந்தத் தீர்மானத்தையும் அலட்சியப்படுத்தி போர்க்குற்றங்களில் இருந்து சிங்களப் பேரினவாத கொடுங்கோலர்களைக் காப்பாற்றுகிற தமிழினத் துரோகச் செயலில்- மனிதகுல விரோத செயலில் ஈடுபடக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகம் விரும்புகிறது.
தமிழினத்தின் இந்த உணர்வுகளை மதிக்காமல் தமிழக சட்டமன்றத்தின் இப்புதிய தீர்மானத்தை மதிக்காமல் நடந்து கொண்டால் இந்தியப் பேரரசு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவே நேரிடும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் எச்சரிக்கை விடுக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications