நடுக்கடலில் சினிமா பாணி.. இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்.. தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளை
மயிலாடுதுறை: இலங்கையில் இருந்து 4 படகில் வந்த கடல் கொள்ளையர்கள் இரவு நேரத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை சினிமா பாணியில் தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் கூட இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தாலும் இன்று வரை அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் தான் இந்திய எல்லையில் நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சூழ்ந்து சினிமா பாணியில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

தமிழக மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன். இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இந்த படகில் அவர் சிலருடன் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது வழக்கம். அதேபோல் கடந்த 12ம் தேதி 6 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பூவரசன் (வயது 25), தென்னரசன் (30), ஆறுமுகம் (60), நிவாஸ் (24), அருள்ராஜ் (34), சரத்(32) ஆகிய 6 பேர் சென்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள்
கோடியக்கரையில் இருந்து வடகிழக்கில் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கை எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று இரவு (வெள்ளிக்கிழமை ) சுமார் 10 மணி அளவில் நான்கு படகுகளில் இலங்கையில் இருந்து கடல் கொள்ளையர்கள் வந்தனர். இந்த கடல் கொள்ளையர்கள் பூவரசன் படகு மீது மோதினர். இதனால் தமிழக மீனவர்கள் பயந்துபோயினர்.

மீனவர்களை தாக்கி கொள்ளை
மேலும் மீனவர்களை கல், கட்டை ஆயுதங்களால் தாக்கிய கொள்ளையர்கள் வலை மீன்களை அள்ளி சென்றனர். இந்த கொள்ளைக்கார கும்பலின் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிருக்கு பயந்து வீடு திரும்பினர். இவர்கள் 6 பேரும் இன்று அதிகாலை பெருமாள் பேட்டை வந்தனர். நடந்த சம்பவத்தை அவர்கள் மீனவ சங்கத்தினர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறினர்.

மருத்துவமனையில் சிகிச்சை
காயம்பட்ட மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்டம் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications