For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி டெல்டா நோக்கி பாயும் கரன்சிகள், வைரங்கள், நகைகள்... சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் கோரிக்கை

காவிரி டெல்டா நோக்கி கரன்சிகளும் வைரங்களும் கொண்டு செல்லப்படுவதாக வெளியான செய்தி குறித்து சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி டெல்டா நோக்கி கொண்டு செல்லப்படும் கரன்சிகள், வைரங்கள், நகைகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் என்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் பழம்பெரும் இதழ் "ஆனந்த விகடன்". அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய "ஆனந்த விகடன்" குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் "ஜுனியர் விகடன்".

Stalin demands CBI probe

9-11-2016 தேதிய "ஜுனியர் விகடன்"இதழில் "மிஸ்டர் கழுகார்" பகுதியில் வந்துள்ள ஒரு செய்தி; நம் அனைவரையும் அதிர்ச்சி அடையத் தக்கச் செய்தியாகும். அது வருமாறு :

"நாட்டுக்கு அவர் ஒரு மன்னர். அவரின் பிரம்மாண்ட பங்களா. அந்த மன்னருக்கு நெருக்கமான அரண்மனைவாசிகளான சிலர் செல்வ மிதப்பில் மிதக்கிறார்கள். ஊழல் மற்றும் கொள்ளையடித்த கரன்சி கட்டுகள், தங்கம், வைடூரிய நகைகளை அந்த அரண்மனைக்குக் கொண்டு வருகிறார்கள். ரகசிய சுரங்கம் வெட்டி, அதில் அந்தப் பொருள்களைப் பாதுகாத்து வைக்கிறார்கள். அரியணையில் அமர்ந்திருந்த மன்னரின் காலடியில் அவர் ஆளும் நாட்டின் செல்வந்தர்கள், பிசினஸ் புள்ளிகள்.... பல நுhறு கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்களை வைத்து விட்டுப் போகிறார்கள்.

"காஷ்மோரா"படத்தில் வரும் பிரம்மாண்ட பங்களா போன்ற அவரது அரண்மனையில் வெளியார் யாரும் உள்ளே நுழைய முடியாது. 24 மணி நேரம் காவல் காக்கும் வீரர்களைக் காவல் போடு கிறார்கள். திடீரென ஒரு நாள் மன்னருக்கு உடல் நிலை பாதிக்கப்படுகிறது. வைத்தியத்திற்காக சித்தர் குடிலுக்குக் கொண்டு போகிறார்கள். சிகிச்சை ஆரம்ப மாகி சில மாதங்கள் ஆகின்றன.

அடுத்த காட்சி..... மன்னரின் பங்களாவில் நடப்பது! வண்டி வண்டியாக பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருள்களை அரண்மனைவாசிகள் அள்ளிச் செல்லுகிறார்கள். மன்னர் எப்போது திரும்புவார்? மீண்டும் பழைய மாதிரி சுறுசுறுப்புடன் ஆட்சி செய்வாரா.... என்கிற சந்தேகத்துடன் இருந்த அந்த அரண்மனைவாசிகள் பங்களாவைக் காலி செய்து விடுகிறார்கள்.....

டெல்டாவில் இருந்து சென்னையை நோக்கி மெகா சைஸ் கார்கள் சீறிப் பாய்ந்து வந்தன. கார் வெள்ளை. அவர்களது உடுப்பும் வெள்ளை வெளேர். ஆளும் உருவமும் பயமுறுத்துகிறது. மத்திய தர ஓட்டல்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். திடீரென இவர்களுக்கு எங்கிருந்தோ உத்தரவுகள் வருகின்றன. உடனே நாலைந்து பேர் கிளம்புகிறார்கள். சென்னையில் மையப் பகுதியான அந்தப் பெரிய வீட்டில் இருந்து வெளியேறும் வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக தங்கள் வாகனத்தைச் செலுத்த வேண்டியது இவர்களது வேலை. இவர்கள் பயணித்த காரின் முகப்பில் சின்ன ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்குமாம். போலீஸ் மேலிடத்துக்கு மட்டுமே அந்த அடையாளம் தெரியும். வாகனம் இடையில் மறிக்கப்பட்டால் அவர்கள் சென்னையில் உள்ள பிரதான அதிகாரிக்கு போனை போட்டுக் கொடுப்பார்கள். சல்யூட் அடித்து வழி விடுவார்கள். அந்தக் கார்களை எந்த டோல்கேட்டிலும், போலீஸ் செக் போஸ்டிலும் நிறுத்தாமல் அனுப்பி வைக்கின்றனர்.

சென்னையின் மையப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மட்டுமல்ல, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை வீடுகள் சிலவற்றில் இருந்தும் இதே போல் வாகனங்கள் வெளியேறுகின்றன. இந்த வெள்ளை வெளேர் சீருடைக்காரர்கள் அதற்கும் செக்யூரிட்டியாகப் போகிறார்கள். சென்னைக்கு வெளியே கொங்கு மண்டலத்தின் மலையோர பங்களாவில் இருந்தும் இத்தகைய வாகனங்கள் வெளியேறுகின்றன. அங்கும் இதே மாதிரியான ஆட்கள் செக்யூரிட்டியாக இருக்கிறார்கள். வாகனங்கள் எந்தப் பக்கம் இருந்து புறப்பட்டா லும் அவை போய்ச் சேரும் இடம் டெல்டா பக்கமாக இருக்கிறது.....

சென்னை டிராபிக் போலீசார் மத்தியில், அந்தக் கார்கள் எங்கெங்கே சென்றன, எப்போது வெளியே வருகின்றன, என்பதை ஆச்சர்யத்துடன் கவனித்து செல்போனில் சக போலீஸ் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்களாம். சென்னைக்குள் சில கார்களுக்கு பைலட் கார்களாக போலீஸ் வாகனங்கள் சென்றது தான் டிராபிக் போலீசாரையே தலைசுற்ற வைத்ததாம்.

முழுக்க, முழுக்க.... கரன்சிகள், வைரங்கள், பத்திரங்கள், நகைகள்..... என்று பட்டியலிடுகிறார்கள்....மொத்தத்தில், பெரிய பங்களா ஒன்றைத் துடைத்து அனைத்துப் பொருள்களையும் மூட்டை கட்டி கார்களில் எடுத்துச் சென்றதாக காவலுக்கு நின்ற போலீசார் பேசிக் கொள்ளுகிறார்கள். "என்று அந்தச் செய்திக் கட்டுரை மேலும் தொடருகிறது.

இதிலே இடம் பெற்றுள்ள செய்திகள், முழுவதும் உண்மை என்பதை மக்கள் அனைவரும் நன்கறிவார்கள். அவர்களின் கண்களில்பட்ட பல சம்பவங்கள் தான் இவை.

ஆனால் இந்தச் சம்பவம் பற்றி மத்திய ஆட்சியிலே உள்ளவர்களுக்கும் தெரியும் என்பதைப் போல அதிலே எழுதப்பட்டுள்ளது. தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் இந்தச் சம்பவங்கள் பற்றி, மத்திய அரசு சி.பி.ஐ. மூலமாக விசாரணை செய்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் பல உண்மைகள் தெரிய வரும்.

ஜுனியர் விகடன் இதழில் வெளி வந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்த மாத்திரத்திலேயே, எந்த பங்களாவிலிருந்து - யாருக்குச் சொந்தமான பணம், நகை, பத்திரங்கள் ஆகியவற்றை - யார் யார் எவரெவரின் துணையோடு எங்கே எடுத்துச் சென்று பதுக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தமிழகத்திலே உள்ள எவரும் எளிதாகவே புரிந்து கொள்ள முடியும்.

இந்தியப் பத்திரிகைத் துறையில் மிகச் சிறந்த நம்பகத் தன்மையை வளர்த்துக் கொண்டுள்ள குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் போகிற போக்கில் ஏனோ தானோவென்று, இவ்வளவு முக்கியமான செய்திகளை வெளியிட வாய்ப்பே இல்லை.

எனவே மத்திய பா.ஜ.க. அரசின் சி.பி.ஐ. மிகக் கடுமையான இந்த நிகழ்வுகளை, வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளதையே புகாராக - முதல் தகவலாக எடுத்துக்கொண்டு, விரிவாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்றும்;

மிகப் பெரிய பொருளாதாரக் குற்றத்திற்கான பூர்வாங்க ஆதாரங்கள் இவை என்பதால், மத்திய பா.ஜ.க. அரசு, நமக்கென்ன என்று நழுவி விடாமல், சமூக - பொருளாதார விரோத சக்திகளை நாட்டுக்கு அடையாளம் காட்டும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK Treasurer MK Stalin has demanded that Centre should order to CBI probe on social- economic offenses related news published in Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X