ஒரு ஊரில் 500 பெண்களுக்கு ரூ.1000 கிடைத்தால் என்ன அர்த்தம்? கிராம பொருளாதாரத்தில் புரட்சி: ஸ்டாலின்
சென்னை: ஒரு கிராமத்தில் 500 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் அந்த ஊருக்குள் ஐந்து லட்சம் ரூபாய் வருகிறது என்று பொருள். மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் வாழ்வில் மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்திலும் ஒரு மிகப்பெரிய புரட்சித் திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் வாழ்வில் மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்திலும் ஒரு மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தும் திட்டம் எனக் கூறியுள்ளார்.

ஸ்டாலின் பேசுகையில், "இரண்டு நாள் முன்பு, ஒரு வீடியோ பார்த்தேன். திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் உடன்பிறப்பு ஒருவர், நிறைய பெண்களிடம் மாதா மாதம் உரிமைத் தொகை வருகிறதா என்று கேட்கிறார். அடுத்து, முதல் மாதம் அந்தப் பணத்தில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார். ஒரு சகோதரி, உரிமைத் தொகையாக வரும் ஆயிரம் ரூபாயை என் மகளின் எதிர்காலத்திற்காகச் செல்வ மகள் திட்டத்தில் சேமிக்கிறேன் என்று சொன்னார். இப்படி, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள் உரிமையுடனும், பாசத்துடனும் எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டுச் சீர் இருக்கிறது என்று சொல்கிறார்கள்!
புரட்சி திட்டம்: மகளிர் அனைவரும் இந்த உரிமைத் தொகையைத் தங்களின் குழந்தைகளுக்கான சேமிப்பாகவும்; தங்கள் குடும்பத்திற்குத் தேவையான கல்வி - மருத்துவச் செலவுகளுக்கான ஆதாரமாகவும் பார்க்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய சகோதரிகளிடம் சென்று சேரும் உரிமைத் தொகை, நம்முடைய கிராமப்புற பொருளாதாரம் வளர, உதவிகரமாக இருப்பதாக பல்வேறு பொருளாதார அறிஞர்கள் ஆய்வுகள் மூலமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தில் 500 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் அந்த ஊருக்குள் ஐந்து லட்சம் ரூபாய் வருகிறது என்று பொருள். இதன் மூலமாக அந்தக் கிராமத்தில் பணப்புழக்கம் அதிகமாகிறது. கிராமப் பொருளாதாரமும் வளர்கிறது! ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் வாழ்வில் மட்டுமல்ல - கிராமப்புறப் பொருளாதாரத்திலும் ஒரு மிகப்பெரிய புரட்சி!
இப்படிப்பட்ட புரட்சிகளால் கோடிக்கணக்கான தாய்மார்கள் முகத்தில் புன்னகையையும் - கோடிக்கணக்கான தமிழ்நாட்டு குடும்பங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமையோடு தெம்போடு துணிவோடு நான் உங்களிடத்தில் சொல்வேன்.” என்றார்.
மேலும் பேசிய ஸ்டாலின், “சமீபத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியைப் பார்த்தேன், நீங்களும் பார்த்திருப்பீர்கள். பா.ஜ.க.வுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்று அவர் சொன்ன கருத்துகளை வழிமொழிந்து, நான் கூடுதலாகச் சொல்கிறேன்... பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால், நாடெங்கும் மதவெறி ஊட்டப்பட்டு, எங்குப் பார்த்தாலும் மதக்கலவரம் என்ற நிலைமை உருவாகும்.
மக்களைப் பிளவு படுத்தி வேற்றுமைகளும் - அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்க அரசியல்சட்டத்தை மாற்றுவார்கள். படிப்பதால்தான் இவர்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்று கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள். மக்களைச் சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை, பொய்களால் மாற்றி எழுதுவார்கள். மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, மாநிலங்களை நகராட்சிகள் போன்று நடத்துவார்கள்...
மாநிலங்களில் இருக்கும் மக்கள், சிறிய பிரச்சினைக்குக்கூட ஒன்றிய அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை உருவாகிவிடும்! மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, ஆளுநர்கள் மூலமாக செயல்படவிடாமல் தடுத்து, போட்டி அரசாங்கம் நடத்துவார்கள்.
சொந்தங்களாக வாழும் இஸ்லாமிய - கிறிஸ்துவர்களை, இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றி, அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள். ஒரே நாடு - ஒரே கலாச்சாரம் - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே தேர்தல் - ஒரே ரேஷன் கார்டு - ஒரே உணவு - ஒரே அரசு - ஒரே கட்சி - ஒரே தலைவர் என்று ஒரே ஒரே - என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்! பா.ஜ.கவின் திட்டங்கள் மிக மிக மோசமானது!
இந்த விடுதலைப் போரில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளை அடையாளம் காண்பது மட்டுமல்ல - துரோகிகளையும் சேர்த்தே அடையாளம் காண வேண்டும்! எதிரிகளையும் - துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும்! பா.ஜ.க.வுக்கு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தக்க பாடம் புகட்ட வேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications