விஸ்ரூபமெடுக்கும் ஜெ. மரணம்.. மு.க.ஸ்டாலினின் பரபரப்பான 10 கேள்விகள்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். பதவிக்காகதான் ஜெயலலிதாவுக்கு 75 நாட்களும் சிகிச்சையளிக்கப்படுவதாக கூறப்பட்டதா என்றும் அவர் வினவியுள்ளார்.
ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி இரவு எந்த நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற பேஷன்ட் கேர் ரிப்போர்ட் என்ற முதற்கட்ட அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி நேற்று பிரத்தியோகமாக வெளியிட்டது. அதில் ஜெயலலிதா ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது அம்பலமானது.
மேலும் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவையும் அவருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிகரித்திருந்ததும், ஆக்ஸிஜன் அளவு குறைந்திருந்ததும் அந்த அறிக்கையில் தெளிவானது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கான விடையை, ஆட்சியாளர்களாலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனாலும் முழுமையாக வெளிக்கொண்டு வரமுடியாது என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கேள்விகள் தம்முடைய தனிப்பட்ட கேள்விகள் அல்ல என்றும், தமிழ்நாட்டு மக்களும், ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்களும் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள் என்றும் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ. போன்ற தன்னாட்சி அமைப்பின் மூலமான விசாரணையில்தான் பெருமளவு உண்மைகள் வெளிப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
1. மத்திய அரசின் உயர் பாதுகாப்பான இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் வாகன வரிசையில் (கான்வாய்) ஆம்புலன்ஸ் இல்லையா? தனது இல்லத்தில் மயங்கிக் கிடந்தவரை அந்த ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லாமல், தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை வரவழைத்து அழைத்துச் சென்றது ஏன்?
2. சர்க்கரை அளவு கடுமையாக உயர்ந்து, இதயத்துடிப்பு அதிகரித்து, ஆக்ஸிஜன் அளவு சரிபாதிக்கும் கீழே குறைந்து மயங்கிய நிலையில் முதலமைச்சரை அனுமதித்த நிலையில், அவருக்கு காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியாக என்ன காரணம்? யாருடைய நிர்பந்தம்?
3. மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் பெற்று வந்த முதலமைச்சர், காவிரி பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார் என்று அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்டது எப்படி?
4. நுரையீரல் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர்களும் அதிகாரிகளும் புடைசூழ ஆலோசனை நடத்துவது முதலமைச்சரின் உடல்நலனில் அக்கறை காட்டும் சிகிச்சை முறைதானா? முதல்வர் ஆலோசனை நடத்தினார் என அரசு சார்பில் அறிக்கை வெளியிட துணைபோன உயரதிகாரிகள் யார், யார்?
5. முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய அரசன் இசட் ப்ளஸ் பாதுகாப்பு படையினர் எங்கே சென்றனர்? 75 நாட்களும் அவர்கள் என்ன செய்தனர்? 75 நாட்களும் அவர்கள் என்ன பணியாற்றினர் என்பது மத்திய அரசின் உள்துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா? அப்படியெனில், ஜெயலலிதா அம்மையாரின் நலன் குறித்து மத்திய அரசுக்கு அப்போதே முழுமையாகத் தெரியுமா?
6. கவர்னரோ மத்திய அமைச்சர்களோ மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மையாரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்கிற மாநில அமைச்சரின் பகிரங்க பேச்சுக்கு ஆளுநர் மாளிகையின் பதில் என்ன? மத்திய அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? திருமதி.சசிகலா அவர்கள் கூட அக்டோபர் முதல் வாரத்துக்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் சொல்கிற நிலையில், இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் அவருடைய கைரேகை பதிவானது எப்படி? அப்போது ஜெயலலிதா என்ன நிலையில் இருந்தார்?
7. விண்ணப்பத்தில் கைரேகை பதிவு செய்யும் அளவிலேயே உடல்நலன் பெற்றிருந்த ஜெயலலிதா அம்மையார், வாக்காளர்களுக்கு விடுத்த வேண்டுகோள் அறிக்கையில் கையெழுத்திட்டது எப்படி? முதலமைச்சரின் கையெழுத்தையே மோசடியாக போடக்கூடியவர்கள் அவரைச் சுற்றியும், அவரது அமைச்சரவையிலும், தலைமைச் செயலகத்திலும் இருந்தார்களா? அப்படியெனில் என்னென்ன திட்டங்களுக்கு கமிஷன் அடிப்படையில் மறைந்த முதலமைச்சரின் கையெழுத்து இதுவரை போடப்பட்டுள்ளது?
8. முதலமைச்சரின் இலாகாக்கள் அவரது ஒப்புதலுடன் திரு.ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. மயங்கிய நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், கடுமையான நோய்த்தொற்றுடன், கையெழுத்திட முடியாத நிலையில் இருந்த ஜெயலலிதா அம்மையார் எந்த முறையில் தன்னுடைய இலாகாக்களை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தார்?
9. ஜெயலலிதா அம்மையாரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நள்ளிரவு கடந்தநிலையில், இடைக்கால அமைச்சரவைக்குப் பதிலாக, திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உடனடியாக முழுமையான அமைச்சரவை பதவியேற்றதற்கு காரணம் என்ன?
10. பதவி வேட்கைக்காகத்தான் அம்மையார் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் தொடர்வதாக 75 நாட்களும் தெரிவிக்கப்பட்டனவா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications