ஒரேயடியா நாட்டை நாசமாக்கிடுவாங்க.. பாஜக நாட்டுக்கும் வீட்டுக்க்கும் கேடு.. ஆவேசமாக பேசிய ஸ்டாலின்!
விழுப்புரம்: ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி, திமுக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:
"ஒட்டுமொத்த நாட்டிற்கே சமூகநீதிப் பாதையை காட்டியவர்தான் நம் தலைவர் கலைஞர். அந்தப் பாதையில் நாடு தொடர்ந்து, நடைபோட வேண்டும் என்றுதான், திராவிட முன்னேற்ற கழகம் முன்னெடுப்பில், அகில இந்திய அளவில் சமூகநீதி மேல் உண்மையான அக்கறை உள்ள இயக்கங்களை - அரசியல் கட்சிகளை இணைத்து - அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கினோம். அந்தக் கூட்டமைப்பு மூலமாக கூட்டங்களை நடத்தி, சமூகநீதிக்காக இந்தியா முழுவதும் உரக்கப் பேசினோம்... மற்ற இயக்கங்களையும் பேச வைத்தோம்.
இப்போது நம்முடைய முழக்கம் - தேசிய இயக்கங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது... நம்முடைய கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அருமைச் சகோதரர் ராகுல் காந்தி என்ன அறிவித்திருக்கிறார்...
"இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக - பொருளாதார - சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும் என்று" அறிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை - நம்முடைய நாட்டைப் படுகுழியில் தள்ளிய பா.ஜ.க.விடமிருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை! நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பா.ஜ.க. தீட்டியிருக்கும் திட்டங்களுக்குத் தடைபோடும் தேர்தல் அறிக்கை! இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த இருக்கும் தேர்தல் அறிக்கை! பா.ஜ.க. இதுபோல வாக்குறுதி கொடுத்திருக்கிறதா?
அதனால்தான், நான் உங்களைச் சந்திக்கும்போதெல்லாம் - இது மிக மிக முக்கியமான தேர்தல் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். இது, இந்திய ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல்! சர்வாதிகாரத்தை விரட்டியடிக்கும் தேர்தல்! சமத்துவம் - சகோதரத்துவம் - மத நல்லிணக்கம் - நம்முடைய உயிர்மூச்சான சமூகநீதிக் கொள்கை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல்! சமூகநீதியை நிலைநாட்டப் போராடும் நமக்கும் - சமூக அநீதியை இழைத்து வரும் பா.ஜ.க. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! மொத்தத்தில் இந்தியாவைப் பாதுகாக்க இந்தியா கூட்டணியை உறுதியாக வெற்றிபெறச் செய்ய வேண்டிய தேர்தல்!
நம்முடைய நாட்டை மத - இன - சாதி - மொழி அடிப்படையில் பிளவுபடுத்தி இடஒதுக்கீட்டை இரத்து செய்யப் பத்தாண்டுகால ஆட்சியில் எல்லாவற்றையும் செய்தது மோடி அரசு! தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு திட்டத்தைக்கூட கொடுக்காமல் வஞ்சித்தது மோடி அரசு! சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பா.ஜ.க. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? பெருமதிப்பிற்குரிய அய்யா ராமதாஸ் அவர்கள்! தன்னுடைய உயிர் என்று அவர் சொல்லிக் கொள்ளும் சமூகநீதி கொள்கைக்குப் பரம எதிரியான பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்து, அவர்களுடைய வேட்பாளர்களையும் பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் போற்றிப் புகழ்கிறாரே! சில நாட்களுக்கு முன்பு வரை என்ன சொன்னார்?
மோடி ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் அய்யா ராமதாஸிடம் நிருபர் கேள்வி கேட்டபோது, "சைபருக்கும் கீழ் ஒன்றும் இல்லை! இருந்தால், அதைதான் கொடுப்பேன்" என்று சொல்லி, பா.ஜ.க.வைக் கடுமையாக விமர்சித்தார். ஆனால், இப்போது அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்? இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறார்... யாமறியேன் பராபரமே! ஆனால்... அவரைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்! அதனால், இதைப் பற்றி விளக்கமாகப் பேச விரும்பவில்லை!
திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சமூகநீதி என்பது உயிர்மூச்சான கொள்கை! அதனால்தான், ஒரு கொள்கைக் கூட்டணியை அமைத்து, அதனுடைய வெற்றிக்காக இங்கு மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
அமையவுள்ள இந்தியா கூட்டணி அரசு, நிச்சயம் சமூகநீதி அரசாக இருக்கும்! அந்த அரசில் நாங்கள் நிறைவேற்றப்போகும் சாதனைகளைத் தேர்தல் அறிக்கையாகக் கொடுத்திருக்கிறோம். அதில் முக்கியமான சில வாக்குறுதிகளைப் பட்டியலிட விரும்புகிறேன்.

பத்தாண்டுகளாகச் சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!
தொழிலாளர் விரோத சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!
ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்!
விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் - வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!
உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும் - ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்!
மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்!
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் எடுக்கப்படும்!
முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு, ஒன்றிய ஏற்றுமதி ஊக்கத்தொகை ஐந்து விழுக்காடு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!
பழைய முந்திரி மரங்களை அகற்றி, அதிக மகசூல் தரும் புதிய வகை முந்திரிக் கன்றுகள் மானியத்துடன் வழங்கிட ஆவன செய்யப்படும்!
பெண்ணாடம் இரயில் நிலையத்தைத் தரம் உயர்த்தி, தென்பகுதி மற்றும் சென்னைக்குச் செல்லும் அனைத்து வகை இரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்!
திண்டிவனம் முதல் நகரி வரையிலான புதிய இரயில் பாதைத் திட்டத்தில் ஆரணி நிலையத்தில் இருந்து ஒண்ணுபுரம் இணைப்புப் பாதையையும் - காஞ்சிபுரம் முதல் செய்யாறு இணைப்புப் பாதையையும் சேர்க்க வழிவகை செய்யப்படும்!
விழுப்புரத்தில் இருந்து காட்பாடி இடையே இருவழி இரயில் பாதை அமைக்கப்படும்!
உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பாதூர் கிராமத்துக்குச் செல்லும் வழியில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்!
உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட நகர்ப்பகுதி இரயில் நிலையத்தில் ஒரு விரைவு இரயிலாவது நின்று செல்ல ஆவன செய்யப்படும்!
சென்னை - பாண்டிச்சேரி பேசஞ்சர் இரயில் விக்கிரவாண்டி இரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்!
தேஜஸ் விரைவு இரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல ஆவன செய்யப்படும்!
இப்படி அனைத்து மக்களுக்குமான வாக்குறுதிகளை வழங்கி, அவற்றை நிறைவேற்றும் அரசாக, இந்தியா கூட்டணி அரசு நிச்சயம் அமையும்!
இந்தியாவுக்கு வழிகாட்டும் நம்முடைய திராவிட மாடல் அரசில் பல்வேறு சாதனைகளைச் செய்துகொண்டு இருக்கிறோம்.
தந்தை பெரியார் பிறந்தநாளை - சமூகநீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை - சமத்துவ நாளாகவும் அறிவித்தோம்!
ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தைப் புதுப்பித்து - தொடர்க்கூட்டங்கள் நடத்தி - அந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம்!
சென்னையில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதருக்குச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்; அவர் பெயரிலான அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இதே விழுப்புரத்தில் இருக்கும் கொழுவாரி சமத்துவபுரத்தை ஒரு ஆதிதிராவிடச் சகோதரியின் கைகளால்தான் திறந்து வைத்தேன்.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாகச் செலவழிக்கப்படுவதைக் கண்காணிக்க - "தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட சட்டம்" கொண்டுவந்துள்ளோம்!
இப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களைக் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது.
நேற்று செய்திகளில் பிரதமர் வருகையைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டை வெள்ளம் - புயல் தாக்கியபோது எட்டிக்கூட பார்க்காத மோடி அவர்கள் - தமிழ்நாட்டிற்கான நிவாரண நிதி கொடுக்க மனம் வராத மோடி அவர்கள் - தேர்தல் வருகிறது என்று ஏற்கனவே நான்கு முறை வந்தார். இப்போது இன்னும் நான்கு முறை வரப் போகிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்குத் தமிழில் வணக்கம் சொன்னால்போதும்... வேட்டி கட்டினால்போதும்... இட்லி பிடிக்கும்... பொங்கல் பிடிக்கும் என்று சொன்னால் போதும் என்று நினைத்துக் கொண்டு வருகிறார் பிரதமர் மோடி!
மக்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்பவர்களைத்தான் மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். மக்களை மதிக்கவில்லை என்றால், அவர்களும் மதிக்க மாட்டார்கள்! மாண்புமிகு மோடி அவர்களே... மீண்டும் மீண்டும் நீங்கள் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழ்நாட்டை பா.ஜ.க. கைப்பற்றவே முடியாது. இது பெரியார் மண்! பேரறிஞர் அண்ணாவின் மண்! தலைவர் கலைஞருடைய மண்! திமுக இருக்கும்வரை உங்கள் எண்ணம் பலிக்கவே பலிக்காது!
மக்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாட்டின் பொற்காலம் என்பது, தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியது தி.மு.க. ஆட்சியில்தான்! தமிழ்நாட்டின் கல்வி அறிவு உயர்வுக்கு வித்திட்டது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சியில்தான்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான். மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து வளர்ச்சிக்கு வழிவகுப்பதும் தி.மு.க. ஆட்சிதான்! இந்த திராவிட மாடல் ஆட்சி, தில்லியிலும் இந்தியா கூட்டணி மூலமாக எதிரொலிக்க வேண்டும். ஏன் என்றால், பா.ஜ.க. வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு!
இந்த விடுதலைப் போரில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளை அடையாளம் காண்பது மட்டுமல்ல - துரோகிகளையும் சேர்த்தே அடையாளம் காண வேண்டும்! எதிரிகளையும் - துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும்! பா.ஜ.க.வுக்கு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தக்க பாடம் புகட்ட வேண்டும்!
எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. - அதற்குத் துணைபோகும் பா.ம.க. - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. - ஆகிய துரோகிக் கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள்!" எனக் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications