களைகளை பிடிங்கி எறிந்து காங்கிரஸை சுத்தப்படுத்துவோம்: ப.சி ஆதரவாளர்களை தாக்கிய ஞானதேசிகன்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் உள்ள‘களை'களை பிடுங்கி எறிந்து விட்டு சுத்தப்படுத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் ஞானதேசிகன் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதன்மூலம் கட்சித்தலைவர் பதவியில் இருந்து தன்னை ராஜினாமா செய்யச் சொன்ன பா.சிதம்பரம் ஆதரவாளர்களை அவர் கடுமையாகத்தாக்கினார்.

லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது தமிழ் நாட்டில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்து மிக மோசமாக தோற்றது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று ப.சிதம்பரம் ஆதரவு மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதற்கு ஞானதேசிகன் ஆதரவாளர்கள் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு ப.சிதம்பரம்தான் காரணம் என்று பதிலடி கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்தது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்களை காரணம் பற்றி ஆராய தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை ஞானதேசிகன் இன்று கூட்டினார். சத்திய மூர்த்தி பவனில் கூட்டம் நடந்தது. ஞானதேசிகன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு காங்கிரசில் 59 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இவர்களில் ப.சிதம்பரம் ஆதரவு தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ளாமல் அடியோடு புறக்கணித்தனர்.
கூட்டத்தில் ஞானதேசிகன் ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் சரியான கூட்டணி அமையவில்லை. தோல்விக்கான காரணம் எல்லோருக்கும் தெரியும். சிலர் என் மீது குற்றம் சொல்கிறார்கள். நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல. தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் கட்சிக்குள் பேச வேண்டியதை வெளியில் அறிக்கை விட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள். இது கட்சியை பலவீனப்படுத்தும். இப்படிப்பட்ட களைகள் பிடுங்கி எறியப்படும். காங்கிரசை சுத்தப்படுத்த வேண்டும்.
தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. வெற்றி தோல்வியை ஒன்றாக கருத வேண்டும். இன்று காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. மீண்டும் வருகிற தேர்தலில் எழுச்சி பெறும்.
இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
ஞானதேசிகன் பேசுகையில், தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ப.சிதம்பரம் ஆதரவாளர்களை தாக்கியும், அவ களை ‘களை'கள் என்று பொருள்படும்படியும் பேசி இருப்பது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால், இதில் மோதல் ஏதும் ஏற்படாமல் தடுக்க சத்தியமூர்த்தி பவன் வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டம் நடைபெறுவதையொட்டி ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். இதனால் சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications