தேர்தல் வரும் போகும்.. ஆனால் அரசியல் நாகரீகம்.. ஜெ.வுக்கு ஸ்டாலின் 'கொட்டு'
சென்னை: தேர்தல் வரும் போகும். எந்த அரசியல் கட்சிக்கும் வெற்றி, தோல்வி மாறி மாறி வரும். ஆனால் கட்சிகளின் தலைவர்களுக்குள் குறைந்தபட்ச அரசியல் நாகரிகம், கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த வகையில்தான் மாற்று கட்சியினரையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் மதித்து வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இடதுசாரிக் கட்சியினரை கூட்டணியிலிருந்து வெளியேற்றிய விதத்தை குறை கூறி இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை...

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு' என்றார் பேரறிஞர் அண்னா. அவர் வழிவந்த தலைவர் கலைஞரும் மாற்றுக்கட்சி தலைவர்களை மதித்து நட்பு பாராட்டுபவர். ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை வைத்துக்கொண்டு கட்சி நடத்தும் அம்மையார் ஜெயலலிதா மாற்றுக் கட்சி தலைவர்களை மட்டுமின்றி தன்னோடு கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்களைக்கூட மருந்துக்கும் மதிப்பதில்லை. மனம் போன போக்கிலும் விமர்சிக்க என்றுமே அவர் கூச்சப்பட்டதில்லை. ‘கூட்டணி தர்மம், அரசியல் நாகரீகம் எல்லாம் கிலோ என்ன விலை" என்று கேட்பது தான் அவர் வழக்கம்.

நரசிம்மராவை விமர்சித்தார்
1991-96-ல் பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கும் தனக்கும் "தலைமுறை இடைவெளி இருக்கிறது" என்று குற்றம் சாட்டினார். அப்போது காங்கிரஸ் கூட்டணியில்தான் ஜெயலலிதா இருந்தார்.

அருணாச்சலத்தை விமர்சித்தார்
காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர், அருனாச்சலம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக விமானத்திலிருந்து இறக்கிய ஜெயலலிதா சமத்துவம் விரும்பாதவர் மட்டுமல்ல. சகிப்புத்தன்மையும் இல்லாதவர்.

ராமதாஸைக் கைது செய்தவர்
தேர்தலில் வெற்றிபெற்றால் தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து தப்பி விடலாம் என்று கருதி 1998 பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளின் அலுவலகங்களுக்கே போனவர் ஜெயலலிதா. பிறகு டாக்டர் ராமதாஸை கைது செய்தவர். வைகோவை பொடா சட்டத்தில் சிறையிலடைத்தவர்.

திமுக ஆட்சியைக் கலைக்கக் கோரியவர்
1998-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தார். தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி வெளியானது. குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அவர்கள் வாஜ்பாயை ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்க அழைத்தார். மார்ச் பத்தாம் தேதி இந்த சந்திப்பு நடைபெற்றது. அன்றைய தினம் குடியரசுத் தலைவரைச் சந்தித்த வாஜ்பாய் அவர்கள், "11-ம் தேதி, அதாவது அடுத்த நாள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் வந்து உங்களை சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு வந்து விட்டார். ஆனால் ஜெயலலிதாவோ "தி.மு.க. ஆட்சியைக் கலைக்கிறேன் என்று உத்தரவாதம் தாருங்கள். அப்போதுதான் நான் ஆதரவுக் கடிதம் தருவேன்" என்று அடம்பிடித்தார்.

தவித்துப் போன வாஜ்பாய்
பிரதமராகப் போகும் வாஜ்பாய் குடியரசுத் தலைவரிடம் 11ம் தேதி சந்திக்கிறேன் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியாமல் தவித்தார். வேறு வழியின்றி குடியரசுத் தலைவரை சந்திப்பதை மேலும் ஒரு நாள் தள்ளிப் போட்டார். 12-ஆம் தேதியும் அவரால் ஆதரவுக் கடிதங்களைக் கொடுக்கமுடியவில்லை. இந்நிலையில் பொறுத்துப் பார்த்த வாஜ்பாய் 12-ம் தேதி இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவரைச் சந்தித்து, 240 எம்.பி.க்களின் ஆதரவுக் கடிதங்களை மட்டும் கொடுத்து விட்டு வந்தார். அப்போதும் கூட அ.தி.மு.க. தனது ஆதரவுக் கடிதத்தைக் கொடுக்கவில்லை.

சமாதானம் செய்ய வந்த ஜஸ்வந்த் சிங்
பிறகு வாஜ்பாய் அவர்களின் தூதுவராக ஜஸ்வந்த் சிங் போயஸ் கார்டன் வந்தார். சமாதானம் செய்தார். மார்ச் 15-ம் தேதி ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்தார். அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் பதவியில் உள்ள குடியரசுத் தலைவரையே காத்திருக்கும் வகையில் ஆதரவுக் கடிதம் கொடுப்பதில் ஆட்டம் காட்டினார் அம்மையார்.. அதன்பிறகாவது பிரதமராகப் பதவியேற்ற வாஜ்பாயை நிம்மதியாக ஆட்சி செய்ய விட்டாரா? அந்த 13 மாதங்களும் அவருக்கு நித்ய கண்டம் பூரண ஆயுசுதான்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஜெயலலிதா வாஜ்பாயைப் படுத்திய பாடு இது.

ஆத்திரப்பட்ட ஜெயலல ிதா
பா.ஜ.கட்சியின் இன்னொரு மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவர்கள், "தி.மு.க. ஆட்சியைக் கலைக்க எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை" என்று கூறிவிட்டார். இதில் ஆத்திரப்பட்ட ஜெயலலிதா, 23.6.1998 அன்று அத்வானியை கண்டித்து ஒரு அறிக்கை விட்டார். அதில், "பல பிரச்சினைகளை நினைவில் வைத்திருக்கும் பி.ஜே.பி. தலைமை குறிப்பிட்ட சிலவற்றில் மட்டும் நினைவிழந்து (செலக்டீவ் அம்னெஷியா) பாதிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது" என்றும், "ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத இப்படிப்பட்ட ஒருவர் (அத்வானி). உள்துறை அமைச்சராக கிடைத்து இருக்கிறாரே என்ற வேதனைதான் ஏற்படுத்துகிறது" என்றார். கூட்டணித் தலைவர்களாக இருந்த வாஜ்பாயையும், அத்வானியையும் கூட விமர்சனம் செய்தவர் தான் ஜெயலலிதா.

சோனியாவை அவமானப்படுத்தினார்
அதன் பிறகு 1999ல் சோனியா காந்தி அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார். ஜெயலலிதாவும், சோனியாவும் விழுப்புரத்தில் மாலை நான்கு மணிக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டு, அங்கே சோனியாவும் வந்து விட்டார். ஆனால் விழுப்புரத்தில் நான்கு மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் சாலை வழியாக சென்னையிலிருந்து 3.30 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா. விழுப்புரத்திற்கு வந்த சோனியா 40 நிமிடம் வரை காத்திருந்து விட்டு அவர் மட்டும் பேசி விட்டு கிளம்பிச் சென்றார். இதுதான் அப்போது கூட்டணிக் கட்சித் தலைவரான சோனியாவிற்கு அம்மையார் அளித்த மரியாதை!

இப்போது இடதுசாரிகளுக்கு அவமரியாதை
2009ல் இடது சாரிக் கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தார்கள். ஒரு பாராளுமன்றத் தேர்தலையும், ஒரு சட்டமன்றத் தேர்தலையும் அ.தி.மு.க. அணியில் சந்தித்து விட்டார்கள். அந்த இடது சாரிக் கட்சிகளையும் இப்போது அவமானப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. பேச்சுவார்த்தை என்று கூறி 15 நாள் இழுத்தடித்திருக்கிறார்.

அருவறுக்கத்தக்க வகையில் பேசியவர்
2001ல் ஆட்சியிலிருந்த போதே "தகரம் கண்டுபிடிக்கும் முன்பே கம்யூனிஸ்டுகள் உண்டியலைக் கண்டிபிடித்தவர்கள்" என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை ஏளனம் செய்து அருவருக்கத்தக்க வகையில் பேசி, சட்டமன்றத்திலும் அதனை பதிவு செய்தவர் ஜெயலலிதா.

புதுக்கோட்டையை அபகரித்தவர்
2011 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. முத்துக்குமரன் மரணம் அடைந்ததால், இடைத் தேர்தல் வந்தது. வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே புதுக்கோட்டை தொகுதியை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே அந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி கூட்டணி தர்மத்தை காலடியில் போட்டு நசுக்கினார்.

பேச்சு நடந்தபோதே வேட்பாளர் பட்டியல்
2011 சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே அனைத்து தொகுதிகளுக்கும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

நன்றி மறந்தவர் ஜெயலலிதா
ஒரு வீட்டில் "சாப்பிட்டு விட்டு கையில் உள்ள அந்த ஈரம் கைவதற்குள் நன்றி மறப்பவர் ஜெயலலிதா" என்பதற்கு உதாரணம் இப்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் கூட்டணி என்று அறிவித்துவிட்டு அவர்களை நடத்திய விதம். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பரதன் அவர்களை சந்தித்தார் ஜெயலலிதா. அடுத்த நாள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்தார்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர்
"இடது சாரிகளும், அ.தி.மு.க.வும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்துள்ளன. எங்கள் அணி வெற்றி பெறும். இது காங்கிரஸுக்கும், பா.ஜ.க.விற்கும் மாற்று அணியாக இருக்கும்" என்றார் ஜெயலலிதா. அப்படி அறிவித்து 22-வது நாளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தார். அவர் சொன்ன சொல்லை 22 நாட்கள் கூட காப்பாற்ற முடியவில்லை. அந்த அளவிற்கு அரசியலில் நம்பகத்தன்மையற்றவர் ஜெயலலிதா.

ஆணவப் போக்கு மிக்கவர்
மாற்றுக் கட்சித் தலைவர்களையும், கூட்டணிக் கட்சி தலைவர்களையும் துச்சமென மதித்து ஆணவப் போக்குடன் நடந்து கொள்ளும் ஜெயலலிதா கையிலா மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்ற அதிகாரத்தை வாக்காளர்கள் கொடுக்கப் போகிறார்கள்? நிச்சயம் மாட்டார்கள். அவர் கையில் கொடுத்தால் அது 'மதம் பிடித்த யானையிடம் சிக்கிய பச்சைக் குழந்தைய் போல் பரிதவிக்கும்" என்பது தமிழக வாக்காளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தேர்தல் வரும் போகும்.. ஆனால் நாகரீகம்...
தேர்தல் வரும் போகும். எந்த அரசியல் கட்சிக்கும் வெற்றி, தோல்வி மாறி மாறி வரும். ஆனால் கட்சிகளின் தலைவர்களுக்குள் குறைந்தபட்ச அரசியல் நாகரிகம், கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த வகையில்தான் மாற்று கட்சியினரையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் மதித்து வருகிறார் தலைவர் கலைஞர் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications