அட்சய திருதியை : திருவிழா கோலம் பூண்ட நகைக்கடைகள்… விடிய விடிய நகை வாங்கிய மக்கள்
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, சென்னையில் உள்ள நகைக் கடைகளில் திருவிழா போல் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறந்து இருந்த காரணத்தால் விடிய விடிய மக்கள் நகை வாங்கிக் சென்றனர்.
அட்சயா என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாது என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
இந்த நாளை தீபாவளி, தை பொங்கலைப்போல இதை ஒரு பண்டிகையாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் பொதுமக்கள்.

அட்சய திருதியை
அட்சய திருதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. கடந்த 15 ஆண்டுகாலமாகவே அட்சய திருதியை நாளில் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இரு தினங்கள்
இந்த ஆண்டு மே1மதியம் 12 மணிக்கு துவங்கிய அட்சய திருதியை திதி இன்று பகல் மதியம் 12 மணி வரை கொண்டாடப்பட்டது. வழக்கமாக 10 மணிக்கு திறப்படும் நகைக்கடைகள் அட்சய திருதியை தினத்தை ஒட்டி அதிகாலை 5 மணி முதலே திறக்கப்பட்டன.

நகை வாங்க குவிந்த மக்கள்
தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் வியாழக்கிழமை காலை முதல் நகை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

திருவிழாக்கோலம்
சென்னையில் தியாகராயநகர், புரசைவாக்கம், பாரிமுனை, மயிலாப்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நகைக் கடைகள் காலை 7 மணிக்கே திறந்து இருந்தன. மாவிலை தோரணங்கள், பூ அலங்காரங்கள் என கடைகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

கவர்ச்சிகரமான விளம்பரங்கள்
பல கடைகளில் தங்க நகைகள், நாணயங்களுக்கு செய்கூலி கிடையாது. கிராமுக்கு 50 முதல் 80 வரை தள்ளுபடி, நகை வாங்க முன்பதிவு செய்தவற்கு முன்பாக என்ன விலை விற்றதோ அந்த விலைக்கு தங்கம் விற்கப்படும், போன் செய்தால் வீடுகளுக்கே நகைகளை வாங்க இலவசமாக வாகனங்கள் அனுப்பப்படும் போன்ற கவர்ச்சிகரமான விளம்பர வாசகங்களைப் போட்டு கடந்த ஒருவாரகாலமாக நாளிதழ்களிலும், டிவிக்களிலும் விதம் விதமாய் விளம்பரம் செய்யப்பட்டது.

வீடு வரை வாகன வசதி
பல பெரிய நகைக்கடைகளில் நகை வாங்கிய பின்னர் வீடுகளுக்கே வாகனங்களில் கொண்டு சென்று விடப்படும் என்றும் கவர்ச்சிகர சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தால் மக்கள் விடிய விடிய நகை வாங்கினர்.

வரிசையில் நின்ற மக்கள்
நகைக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். கூடுதல் கவுன்டர்களும் திறக்கப்பட்டிருந்தன. வரிசையில் நின்று நகை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

காதுகுத்தப்போறோம்
நகை எடுக்க வந்த சிலரிடம் பேச்சு கொடுத்த போது பேத்திக்கு காதுகுத்த நகை எடுக்க வந்ததாக உற்சாகத்துடன் தெரிவித்தனர். ஆண்டு தோறும் அட்சய திரிதியை நாளில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிடுவோம் என்று கூறினர் அவர்கள்.

புதுமாப்பிள்ளைக்கு நகை
பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் ஆர்வத்துடன் நகை வாங்க வந்திருந்ததை காணமுடிந்தது. திருமணப்போகும் புதுமாப்பிள்ளை ஒருவருக்கு குடும்பத்தோடு நகை வாங்க வந்திருந்தனர்.

வெள்ளி கொலுசு மணி
தங்கம் வாங்க முடியாதவர்கள், வெள்ளி மட்டுமாவது வாங்குவோம் என்று வந்திருந்தனர். வெள்ளி கொலுசு ஒன்றை ஆசையோடு மனைவிக்கு அணிவித்து அழகு பார்த்தார் கணவர்.

போலீஸ் பாதுகாப்பு
‘தியாகராயநகர், புரசைவாக்கத்தில் பெண்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பெண்கள் முண்டியடித்து கொண்டு நகை களை வாங்கி சென்றனர். இதையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் குண்டு வெடிப்பும் நிகழ்ந்த காரணத்தால், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

பிரம்ம முகூர்த்த வியாபாரம்
அட்சய திருதியைக்காக ஒரு சில கடைகள் அதிகாலை 5.30 மணிக்கே திறக்கப்பட்டன. இன்று(2ம் தேதி) அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை பிரம்ம முகூர்த்தம் வருகிறது. இந்த நேரங்களில் நகைகள் வாங்குவதை வாடிக்கையாளர்கள் விருப்பமாக கொண்டுள்ளனர். எனவே, நகை களை இரவில் கடைகளை மூடாமல் விடியவிடிய திறந்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்தார்.

விற்பனை அதிகரிப்பு
அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும். அதே போல், இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 முதல் 40 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தங்கம் விலை சரிவு
இதனிடையே 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ 112 குறைந்து ரூ 22,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ 14 உயர்ந்து ரூ 2,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ 15 குறைந்து ரூ 2,995க்கு விற்கப்படுகிறது. நேற்றைய தினம் மாலை ஆபரணத்தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.2810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையும் சரிவு
வெள்ளி ஒரு கிராம் 20 காசு குறைந்து ரூ 44.10க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ 135 குறைந்து ரூ 41,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications