திமுகவுக்கு மீண்டும் நூல் விடுகிறதா தேமுதிக?... துரைமுருகன் சஸ்பெண்ட்டை எதிர்த்துக் குரல்!
சென்னை: திமுக பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் இருந்து வரும் தேமுதிக இன்று சட்டசபையில் திடீரென திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து மறுபடியும் எல்லோரின் பார்வைக்கும் ஆளாகியுள்ளது.
இந்த திடீர் ஆதரவு எதற்காக என்று தெரியவில்லை. ஆனாலும் திமுக பக்கம் அது ஆதரவாக குரல் கொடுத்திருப்பது மறுபடியும் கூட்டணி தொடர்பான நம்பிக்கையை துளிர்க்க வைக்க உதவுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சட்டசபையிலிருந்து 5 நாட்களுக்கு துரைமுருகனை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்துத்தான் இன்று சட்டசபையில் தேமுதிக குரல் கொடுத்தது.

உத்தரவை திரும்பப் பெறுக
சட்டசபையில் இன்று தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் பேசுகையில், சபாநாயகர் தனது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

விவாதமே கிடையாது
முன்னதாக இந்த விவகாரம் சட்டசபையில் இன்று அமளியைக் கிளப்பியது. திமுகவினர் இதுகுறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நிராகரித்தார். அவர் கூறுகையில், இதில் இனி விவாதமே கிடையாது . சட்டசபை உரிமைக் குழுவின் பரிந்துரையின்பேரில்தான் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

துணை சபாநாயகர் கொடுத்த புகாரின் பேரில்
முன்னதாக துரைமுருகன் மீது உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பியவர் துணை சபாநாயகரும், உரிமைக் குழுவின் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆவார். அவர் கொடுத்த புகாரின்பேரில்தான் துரைமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் மாதம் பேசிய பேச்சுக்காக
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செய்தியாளர்களிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் பேசியது தொடர்பான பிரச்சினை இது. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். துரைமுருகன் மட்டும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

தேமுதிகவின் ஆதரவு.. சந்தேகம்
இந்த நிலையில் துரைமுருகனுக்கு ஆதரவாக சட்டசபையில் தேமுதிக பேசியது திமுக தரப்புக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமா என்பது தெரியவில்லை. அதேசமயம், கூட்டணிக்காக திமுக பக்கம் நூல் விட தேமுதிக முயற்சிக்கிறதா என்ற கேள்வியையும், கூட அது எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications