3 மாணவிகள் மரண வழக்கு: எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் வாசுகிக்கு 7 நாள் போலீஸ் காவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் வாசுகியை, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும், விசாரணை அதிகாரிகளாக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி ஆகிய 3 பேரை நியமித்து கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி, உத்தரவிட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கடந்த 23ம் தேதி கல்லூரியின் எதிரில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தனர். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்பு கல்லூரி தாளாளர் மகன் சுவாகர்வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கல்லூரி தாளாளர் வாசுகி 25ம் தேதி சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வியாழக்கிழமையன்ற கல்லூரி தாளாளர் வாசுகியை போலீசார் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வாசுகியிடம் விசாரணை செய்த நீதிபதி தமிழ்செல்வி 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று வாசுகி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வாசுகியை 10 நாள் காவல் விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார்.
தாளாளர் வாசுகியின் வழக்கறிஞர் குறுக்கிட்டு 10 நாள் விசாரணை தேவையற்றது என்றார். அப்போது நீதிபதி தமிழ்செல்வி இதுகுறித்து வாசுகியிடம் கேட்டார். அப்போது வாசுகி, மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வியிடம் தனக்கும் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேலுக்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருப்பதால், இந்த வழக்கை அவர் விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தெரியாமல் போய்விடுவார்கள் என்றார்.
இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக வேறு போலீஸ் இன்ஸ்பெக்டரை நியமித்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் மாஜிஸ்திரேட்டிடம் வைத்தார். இதனை கேட்ட மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, வாசுகியை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும், விசாரணை அதிகாரிகளாக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி ஆகிய 3 பேரை நியமித்து உத்தரவிட்டார். மேலும் வருகிற 4ம்தேதி அன்று மீண்டும் வாசுகியை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தாளாளர் வாசுகியை 7 நாள் காவலில் விசாரித்துவிட்டு வரும் 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications