தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? நாளை விருப்ப மனு விநியோகம்- 10 ஆண்டு உறுப்பினராக இருந்தால்தான்!
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் தலைவர் பதவிக்கான விருப்ப மனு நாளை விநியோகிக்கப்படுகிறது. பாஜகவில் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக எவரும் பாஜக தலைவர் பதவிக்கு விருப்ப மனு வழங்கலாம்; மேலும் பாஜகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரின் பரிந்துரையுடன் விருப்ப மனு தர வேண்டும்; இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தமிழக பாஜகவின் புதிய தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக கு.அண்ணாமலை இருந்து வருகிறார். அதிமுகவுடனான கூட்டணி உள்ளிட்ட காரணங்களால், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட இருக்கிறார். புதிய தலைவர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை எனவும் அண்ணாமலை அறிவித்துவிட்டார்.
தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் தேர்வு மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று இரவு சென்னை வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது; இந்த தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும்.
3 பருவம் தீவிர உறுப்பினராகவும் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவர்,. இவரை கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் பாஜகவின் புதிய தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications