மெர்சல் படத்தை இலவசமாக காண்பிக்கனும்.. தமிழிசை தாறுமாறு யோசனை!
நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் மக்கள் நலனுக்கானது எனில் டிக்கெட்டுக்கு கட்டணம் எதற்காக வசூலிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மெர்சல் திரைப்படமானது மக்கள் நலன் சார்ந்த படம் என்றால் அதை பார்க்க மக்களிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிப்பது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. முதலில் தலைப்புக்கு சோதனை வந்தது. அதன்பின்னர் நீதிமன்றம் சென்று நல்ல படியாக முடித்து வைக்கப்பட்டது.
இதையடுத்து படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா, பாம்பு ஆகியவை கிராபிக்ஸ் என்று குறிப்பிடாததற்கு ஏன் என்று விலங்குகள் நல வாரியம் கேள்வி எழுப்பி தடையில்லா சான்று வழங்காமல் இருந்தது.

ஆவணங்கள் தாக்கல்
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருவான்மியூரில் உள்ள விலங்குகள் நல வாரியத்தில் தேவையான ஆவணங்களை படக்குழுவினர் தாக்கல் செய்தனர். இதையடுத்து அந்த படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டு கடந்த தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.

டிஜிட்டல் இந்தியா
படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து வசனங்கள் இருப்பதால் அந்த காட்சிகளுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த காட்சிகளை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெர்சல் குறித்து தமிழிசை
மெர்சல் படம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிர் கருத்துகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கடலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவர்களை இழிவுப்படுத்துவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.அந்த காட்சிகளை நீக்க வேண்டும்.

இலவச காட்சிக்கு அனுமதியுங்கள்
மக்கள் நலன் சார்ந்த படம் தானே ரூ.5 கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ படம் பார்க்க படக்குழுவினர் அனுமதிப்பார்களா. கலைச் சேவைதானே. மக்களை சந்தோஷப்படுத்த இலவசமாக பார்க்க அனுமதியுங்களேன். மருத்துவர்கள் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்டு சேவையாற்றி வருகின்றனர். எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்பது சரியானது அல்ல என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications