தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது... 3 நாட்கள் நடக்கிறது!
தமிழக சட்டப்பேரவையின் குளிர் காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இது வரும் திங்கட்கிழமை வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிர்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவியை அவர் இழந்தார். எனவே, தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானதிலிருந்து தமிழக அரசு மந்தமாக செயல் பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடர்பான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று நடந்தது.
சட்டசபைத் தலைவர் தனபால் தலைமையிலான இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கொறடா மனோகரன், தி.மு.க. கொறடா சக்ரபாணி, தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரை, வெள்ளி மற்றும் திங்கட்கிழமை வரை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் நாளான இன்று முதலில் மறைந்த உறுப்பினர்கள் 6 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, கூடுதல் செலவிற்கான 2வது துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
துணை நிதிநிலை அறிக்கையில் உள்ள மானிய கோரிக்கைகள் உள்ளிட்டவற்றின் மீது 8 ஆம் தேதி விவாதம் மற்றும் உரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சட்டசபைக் கூட்டத்தை 3 நாட்கள் மட்டுமே நடத்துவதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் அதிகம் இருப்பதால் குறைந்தது 5 நாட்களாவது கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என அவை வலியுறுத்திய போதும், சட்டசபைத் தலைவர் அதனை ஏற்கவில்லை. இதனையடுத்து அலுவல் ஆய்வு கூட்டத்திலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் ஸ்டாலின் :
இந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் இன்று திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சட்டசபை வளாகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த ஸ்டாலின், அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications