நீங்க ஒரு மெசெஞ்சர்! என் செய்தியை போடுங்கன்னு கெஞ்சினேனா? கையை நீட்டி நிருபர்களை மிரட்டிய அண்ணாமலை
சென்னை: திமுக சொத்து பட்டியல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போது இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது பத்திரிகையாளரை அண்ணாமலை ஒருமையில் பேசினார்.
பத்திரிகைகள் இந்தியாவின் 4-ஆவது தூண் என அழைக்கப்படுகிறது. பல்வேறு ஊழல்கள், மோசடிகள் உள்ளிட்டவை பத்திரிகையாளர்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அது போல் உதவி தேவைப்படுவோரையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கோடிட்டு காண்பிப்பதும் பத்திரிகை துறை ஆகும்.

அப்படிப்பட்ட பத்திரிகையாளர்கள் மக்கள் சார்பாக அரசியல்வாதிகளிடம் கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை பெற்றுத் தருவர். அந்த வகையில் பெரும்பாலும் அரசியல் தலைவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை மரியாதையாகவே நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் சில நேரங்களில் பத்திரிகையாளர்களை அண்ணா என அழைத்தாலும் பல நேரங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகளை எதிர் கொள்ளமுடியாமல் அண்ணாமலை மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறார். கடலூரில் அண்ணாமலையிடம் கேள்வி கேட்க முயன்ற நிருபர்களை ஏன் குரங்கு போல் தாவித் தாவி வருகிறீர்கள் என அநாகரீகமாக தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கு பத்திரிகையாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். அது போல் திமுகவுக்கு ஆதரவாக கேள்விகளை கேட்டால் என்ன அறிவாலயத்தில் பணம் வாங்கிகிட்டு கேள்வி கேக்குறீங்க.. என அவர் பேசியது விமர்சனங்களை எழுப்பியது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யாராக இருந்தாலும் சேனல் பெயரையும் செய்தியாளர் பெயரையும் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள் என கறாராக கூறினார்.
யூடியூப் சேனல் செய்தியாளர்களை எதற்காக உள்ளே அனுமதித்தீர்கள், இனி பத்திரிகையாளர் சந்திப்பில் யூடியூப் சேனல்களுக்கு அனுமதி இல்லை என்றார். 40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக் கொண்டு லைக் வாங்குவதற்கு யூடியூப் சேனல் நடத்துவோர் கேள்வி கேட்க வந்துட்டீங்களா என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பத்திரிகையாளர்களை விமர்சிக்கும் அளவுக்கு அண்ணாமலை பேசியுள்ளார்.

திமுக ஊழல் பட்டியல் தொடர்பாக அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நீங்கள் ஒன்றும் ஜட்ஜ் கிடையாது, நீங்கள் ஒரு மெசென்ஜர், நான் சொல்வது பிடித்திருந்தால் உங்கள் ஆடியன்ஸுக்கு போடுங்கள். நீங்கள் ஒன்றும் குவாலிஃபாடு ஆடிட்டரோ, குவாலிஃபைடு சார்ட்டட் அக்கவுண்டன்ட்டோ கிடையாது.
என் நியூஸ் போடலாமா வேண்டாமானு உங்கள் எடிட்டர் முடிவு செய்வாரு. நீங்கள் லாயர் கிடையாது, ஒரு பத்திரிகையாளர். பிடிக்கலைனா செய்தி போடாதீங்க. உங்கள் காலில் விழுந்தேனா , இல்லை உங்கள் எடிட்டரோட டீ சாப்பிட்டேனா, உங்கள் ஆபிஸுக்கு நான் வந்திருக்கேனா? டிவியில் என் செய்தியை போடுங்கன்னு சொன்னேனா? எனது கருத்து ஏற்கவில்லைனா போடாதீங்க, என்றைக்காவது உங்ககிட்ட என் செய்தி போடுங்கன்னு கெஞ்சியிருக்கேனா என அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.












Click it and Unblock the Notifications