71வது சுதந்திர தினம்: போலீசாருக்கு விருது வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கௌரவம்!
தமிழக காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கம் மற்றும் தமிழக முதல்வர் பதக்கம் 854 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி கௌரவித்தார்.
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதக்கம் வழங்கிக் கௌரவித்தார்.
நாடு முழுவதும் 71ஆவது சுதந்திர தினவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். மேலும் பல்வேறு துறைகளில் சேவை புரிந்த பலருக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் பதங்கங்கள் மற்றும் தமிழக முதல்வர் பதக்கங்கள் 854 தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டன. இந்த விருது என்பது 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கப் பரிசு கொண்டதாகும்.
காவல்துறை மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 635 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த 103 பேருக்கும், சிறைத்துறையைச் சேர்ந்த 63 பேருக்கும், குடிமை மற்றும் ஊர்காவல்படையை சேர்ந்த 53 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் 265 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்களும், 589 பேருக்கு முதல்வர் பதக்கங்களும் வழங்கப்பட்டது. அதில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, உளவுப் பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி உட்பட 16 காவல்துறை அதிகாரிகளுக்குப் புலன் விசாரணை மற்றும் பொதுப் பணிக்கான சிறப்புப் பதக்கங்களை முதல்வர் வழங்கினார்.
மேலும் காஞ்சிபுரம் தலைமையிட கூடுதல் எஸ்பி கே.வீரமணி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ப.அசோக் நடராஜன், மதுரை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் வெ.நாக ராஜன், சென்னை மெட்ரோ சிபிசிஐடி ஆய்வாளர் சி.உமாதேவி, சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் ஆ.சிவ ஆனந்த், வள்ளியூர் ஆய்வாளர் ஜே.அன்பு பிரகாஷ், நத்தம் ஆய்வாளர் பி.பார்த்திபன், பெரம்பலூர் மகளிர் ஆய்வாளர் ஜே.மலர்க்கொடி, திருச்சி இருப்புப்பாதை காவல் எஸ்ஐ மு.சுந்தரமூர்த்தி ஆகிய 10 பேருக்கு புலன் விசாரணைக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications