தமிழகத்தின் தண்ணீர் தேவையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஸ்வரன்
தமிழகத்தின் தண்ணீர் தேவையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் விரைவில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. அது மோசமாவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீரை தேடி காலி குடங்களுடன் மக்கள் அலைமோதும் சூழல் உருவாகி இருக்கிறது.
தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயிகள் காவிரி நீராவது தமிழக அரசு பெற்று தருமா என்ற ஏக்கத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதிகரிக்கும் வறட்சி
அந்த அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது. தமிழகம் வறட்சியை இன்று நேற்றல்ல பல வருடங்களுக்கு முன்பிருந்தே சந்தித்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு வறட்சியின் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டல மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட இன்னும் பல மாவட்டங்களில் நாளுக்குநாள் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது.

தண்ணீர் இல்லாத நிலை
பல வருடங்களாக வளர்த்து பலன் தரும் நேரத்தில் வறட்சியின் பிடியில் காய்ந்து போகும் மரங்களை காப்பாற்றுவதற்காக கடன் வாங்கி விவசாயிகள் புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க முற்படுகிறார்கள். 1500, 1800 என்று எத்தனை அடி போட்டாலும் விவசாயினுடைய கண்களில் தண்ணீர் வருகிறதே தவிர, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வருவதே கிடையாது. தமிழகம் போகின்ற போக்கை பார்த்தால் இன்னும் சில வருடங்களில் கண்களில் கூட தண்ணீர் வராத நிலை ஏற்படும்.
கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்
வறட்சியின் பாதிப்புக்காக மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதை விட, வறட்சி இனி ஏற்படாமல் இருப்பதற்கான நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் மட்டுமே வரவிருக்கும் மிகப்பெரிய ஆபத்திலிருந்து மக்கள் தப்பிக்க முடியும். மாநில அரசு கர்நாடகத்தில் இருந்து நீரைப் பெற தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேவையான நடவடிக்கை
மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பெருமை பேசுபவர்களால் தமிழக விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு தேவைப்படும் தண்ணீரை கொடுக்க முடியுமா ? மத்திய, மாநில அரசுகள் நிலைமை உணர்ந்து செயல்பட வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
