கைல காசு வேணாம்.. "டாஸ்மாக்கில்" வருகிறது புதிய மாற்றம்.. அதென்ன பில்லிங் சிஸ்டம்.. செம மாஸ் பிளான்
சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் நிலவும் முறைகேடுகளை தடுக்க, பல்வேறு அதிரடி அறிவிப்புகள் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
2 நாட்களுக்கு முன்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி, முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தார்.. அதில், டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும், மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 6 முக்கிய உத்தரவுகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பிறப்பித்திருந்தார்..
மேலும், அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்கப்பட வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

திடீர் சோதனை: எனினும், தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. எனினும் இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லையாம்.. அதனால், கேரளாவில் உள்ளதை போலவே, கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
மதுபானம்: இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் சொல்லும்போது, "டாஸ்மாக் கடைகளில், கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்படி கஸ்டமர்கள், மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.
பில்லிங் முறை: அனைத்து கடைகளிலும் இந்த கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்பி ஆய்வு செய்யவும், அரசிடம் அனுமதி கேட்கப்பட உள்ளது.. டாஸ்மாக் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இன்னொரு அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறதாம்.. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிகிறது.
விற்பனை: கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படுவதுடன், அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications