கூகுள் பே இல்லையா.. டாஸ்மாக் கடையில் ரகளை செய்த மதுப்பிரியர்.. ஊழியரையும் தாக்கி விட்டு தப்பி ஓட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கூகுள் பே மூலமாக பணம் செலுத்தி மதுபாட்டிலை வாங்க முடியாத ஆத்திரத்தில் கடையை உடைத்து ரகளை செய்ததோடு விற்பனையாளரையும் தாக்கி மதுப்பிரியர் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தள்ளு வண்டி கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை தற்போது டிஜிட்டல் முறையிலான பண பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. ஒரு டீ, வடை சாப்பிட்டால் கூட அதற்கும் கூகுள் பே, பே டிம், போன் பே மூலமாக சில நொடிகளில் பணத்தை பரிமாற்றம் செய்து விடுகின்றனர்.
சில்லறை தட்டுப்பாடு போன்ற சிரமங்கள் எதுவும் இல்லை என்பதால் கடைக்காரர்களும் இந்த பரிவர்த்தனையே அதிகம் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும், இந்தியா முழுவதும் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வங்கி பரிவர்த்தனை மூலம் சுற்றி வந்து விடலாம் என்று சொல்லும் அளவுக்கு தற்போது வசதி பெருகிவிட்டது.

மது வாங்க சென்ற வாலிபர்
சாதாரண பெட்டிக்கடைகளில் கூட ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் வசதி உள்ளது. குக்கிராமங்கள் முதல் மெட்ரொ சிட்டி வரை இந்த வசதி பெருகிவிட்டது. சரி இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம். எங்கும் வியாபித்து இருக்கும் கூகுள் பே டாஸ்மாக் கடையிலும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர் டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்று இருக்கிறார்.

கூகுள் பே இல்லாதாதால்
ஆனால், அங்கு கூகுள் பே இல்லாதாதால் மதுவை வாங்கிவிட்டு விற்பனையாளர்களிடம் ரகளை செய்து இருக்கிறார். இது சம்பவம் தொடர்பான விவரம் வருமாறு:- பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை ஒன்று உள்ளது. இந்தக் டாஸ்மாக் மதுக்கடையில் அன்னமங்கலம் கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிதேவன் மற்றும் பெரம்பலூரை சேர்ந்த மூர்த்தி என்ற இருவர் விற்பனையாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்தக் கடைக்கு அன்னமங்கலம் மேலக்காடு பகுதியை சேர்ந்த இன்னாசி என்பவர் மது வாங்க சென்று இருக்கிறார்.

கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நபர்
அப்போது விற்பனையாளர் மணி தேவனிடம் தன்னிடம் கையில் காசு இல்லை கூகுள் பே மூலமாக பணம் செலுத்துகிறேன். ஒரு குவார்ட்டர் கொடுங்கல் என்று கேட்டு இருக்கிறார். ஆனால் டாஸ்மாக் கடையில் கூகுள் பே வசதியே கிடையாது. இது உங்களுக்கு தெரியாதா? என்று கூறி மதுபாட்டிலை கொடுக்க மறுத்துள்ளார். இதனால், மது வாங்க முடியவில்லையே என்று கோபம் அடைந்த இன்னாசி ஆத்திரத்தில் டாஸ்மாக் கடையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார். தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர் மணிதேவனையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

108 ஆம்புலன்ஸ் மூலம்
இன்னாசி தாக்கியதில் காயம் அடைந்த மணிதேவனை சக ஊழியர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிதேவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற்னர். கூகுள் பே இல்லை எனக்கூறி டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்டதோடு ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications