இரவில் கடைக்குள்ளேயே தங்க வேண்டும்.. அரசு உத்தரவு.. "ஷாக்"கில் டாஸ்மாக் ஊழியர்கள்
சென்னை: டாஸ்மாக் கடை ஊழியர்கள், இரவில் கடை முடிந்ததும், கடையை பூட்டி விட்டு கடைக்குள்ளேயே தங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது. இப்படித் தங்கிய செல்வம் என்ற ஊழியர்தான், போராட்டக்காரர்கள் வீசிய பெட்ரோல் குண்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த கண்டிப்பான உத்தரவால் ஊழியர்கள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இன்னும் சிலர், வேண்டும் என்றே தங்களைக் கடைக்குள் தங்கச் சொல்வதாகவும் ஒரு குறிப்பிட்ட சக்தி வாய்ந்த கட்சியினர் சிலரே வன்முறையில் ஈடுபட்டு மது விலக்குக்காக போராடி வருபவர்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்தத் திட்டம் தீட்டப்படுவதாகவும், தங்களை அதற்குப் பலிகடாவாக்க சிலர் முயல்வதாகவும் கூறுகிறார்கள்.
மதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் இருந்து, அந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஒரு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகிய தாங்கள் மதுபானக்கடையை அடைத்த பின்பு கடைகளில் இரவு தங்கி இருக்கவேண்டும். எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் கண்காணித்து காவல் நிலையத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்தும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டதுள்ளதாம்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பிரதான சாலையில் இயங்கி வரும் புதுப்பாளையம் டாஸ்மாக் கடையின் விற்பனையாளராக பணிபுரிந்த செல்வம் கடையை உள்புறமாக பூட்டிவிட்டு தூங்கியபோதுதான் கடை மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பரிதாபாக உயிரிழந்தார் செல்வம்.
இந்த சம்பவம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிகரிக்கும் போராட்டங்கள்
சமூக ஆர்வலர் சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு கடை ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவேண்டும் என சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.

கடைக்குள் தங்க நிர்ப்பந்தம்
டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் கடை ஊழியர்களை பணி முடித்து வீட்டிற்கு செல்லாமல் கடைக்குள் தங்கி கடையை பாதுகாக்கவேண்டும் என மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மூலமாக வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. காவல்துறையும் தனது பங்கிற்கு கடை ஊழியர்களை கடைக்குள் தங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது.

அதிகாரிகள் நெருக்குதலால் செல்வம் பலி
இதனால் பல கடைகளில் ஊழியர்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் வாழப்பாடியில் கடையின் மீது நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதில், உள்ளே தங்கிய விற்பனையாளர் செல்வம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாரிகளின் நெருக்கடியால் கடைக்குள் தங்கி உயிரிழந்த செல்வத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அஞ்சலி செலுத்துகிறது. இந்த சம்பவத்திற்கு டாஸ்மாக் அதிகாரிகளும், காவல் துறையினருமே பொறுப்பேற்கவேண்டும்.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பணி நேரத்திற்கு பின்பும் கடைக்குள் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்ட மாவட்ட மேலாளர், காவல்துறை அதிகாரி மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியின்போது மரணமடைந்த செல்வத்தின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் அவருடைய மனைவிக்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும். செல்வத்தின் மரணத்திற்கு காரணமான படுபாதக செயலை செய்தவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்கிட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

காட்டுமிராண்டித்தனம்
டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்வத்தின் மரணத்துக்கு டாஸ்மாக் நிர்வாகமும், காவல்துறையும் முதன்மையான காரணம். மேலும் போராட்டத்தை வன்முறையோடு நடத்திய அமைப்பினரும் ஒரு காரணம். காட்டுமிராண்டிதனமான இந்த வன்முறை செயலை கண்டிக்கிறோம்.

கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்
பணி நேரம் முடிந்த பின்னரும் கடைக்குள் இருக்கவேண்டும் என்று நிர்பந்தித்த அதிகாரிகள், காவல் துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். செல்வத்தின் மனைவிக்கு அரசு நிரந்தர பணியும், குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் வழங்கவேண்டும். மேலும் அவரின் மகள், மகன் உயர்படிப்புக்கான செலவை அரசே ஏற்கவேண்டும்.

வாட்ச்மேனைப் போடுங்கள்
பெட்ரோல் குண்டு வீசி செல்வத்தின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான தண்டனையை தமிழக அரசு வழங்கவேண்டும். வருங்காலங்களில் டாஸ்மாக் கடைகளை பாதுகாக்கும் பொறுப்பினை காவல் துறை நேரடியாக மேற்கொள்ளவேண்டும் அல்லது இரவு நேர பாதுகாவலரை அரசே நியமித்து பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

போராட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
டாஸ்மாக் ஊழியர்களும் சமூகத்தில் ஒரு பகுதியை சார்ந்தவர்கள் என்பதை மதுவிலக்கு போராட்டம் நடத்துபவர்கள் கருத்தில்கொண்டு வன்முறையை தவிர்த்து அறவழியில் போராடவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications