கேளிக்கை வரி விலக்கு சினிமா துறைக்கு மட்டுமே... பார்வையாளர்களுக்கல்ல! - தமிழக அரசு
சென்னை, மார்ச் 26: தமிழ் கலாசாரத்தை வளர்க்கும் விதமான திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் கேளிக்கை வரி விலக்கு, சினிமா துறைக்காக வழங்கப்படுகிறதே தவிர, பார்வையாளர்களுக்கு அல்ல என வணிக வரித் துறைச் செயலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.ஜே.சரவணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழ் பெயர்கள் கொண்ட திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடிவு செய்து கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை அரசு ஆணை வெளியிட்டது.

இதன் பிறகு தமிழ் மொழி, கலாசாரம் ஆகியவற்றை வளர்க்கும் விதமான திரைப்படங்கள், யு தணிக்கை சான்றிதழ், அதிக வன்முறைச் சம்பவங்கள் இல்லாத படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு மீண்டும் அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் வணிக வரித் துறை திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு, பார்வையாளர்களிடமிருந்து வரியுடன் சேர்த்து அதிக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வசூலித்தால் அது சட்டத்தை மீறியதாகும் எனத் தெரிவித்தது.
அந்த சுற்றறிக்கை திரையரங்க உரிமையாளர்கள் பயன் பெறும் வகையில் உள்ளது. எனவே, வணிக வரித் துறை கடந்த ஆண்டு அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் திரைப்படங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அப்போது, வணிக வரித்துறையின் முதன்மைச் செயலர் கே.ராஜாராமன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் வணிக வரித் துறையின் சுற்றறிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதால், சட்டத்தின் படி இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.
சினிமா துறையை ஊக்கப்படுத்தவும், தமிழ் கலாசாரத்தை வளர்ப்பதற்காகவும் கடந்த 2006-07 -ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பின்படி பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், வரி விலக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட திரையரங்க நிர்வாகங்கள் அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனவா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
வரி விலக்கு அளிக்கப்படுவதையோ, அதன் பிறகு அரசு பிறப்பிக்கப்பட்ட ஆணை, முடிவுகளை எதிர்த்தோ மனுதாரர் வழக்குத் தொடரவில்லை. அதனால் இந்த சுற்றறிக்கையை மனுதாரர் எதிர்ப்பதற்கு தற்போது அனுமதிக்க முடியாது. சட்ட விதிகளுக்குட்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் செயல்படுகின்றனரா எனக் கண்காணிப்பதற்கே அதில் உத்தரவிடப்பட்டது.
2006-07 -ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில், தமிழ் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் கேளிக்கை வரி விலக்கு பயன்கள் சினிமா துறைக்காக எனவும், அது பார்வையாளர்களுக்கு அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்றுதான் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர் இதை முழுவதும் தவறாகப் புரிந்து கொண்டு, உள்நோக்கத்துடன் குற்றஞ்சாட்டியுள்ளார். அடிப்படை ஆதாரம் இல்லாமல், மிகவும் அவதூறாக தெரிவித்துள்ள இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications