''எனக்கு ஒரு சீல எடுத்துக் கொடுங்க அப்பு''.. ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மூதாட்டி வைத்த டிமாண்ட்!
கள ஆய்வில் தீவிரம் காட்டும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன்.
தென்காசி: தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனிடம், தனக்கு ஒரு சேலை எடுத்துக் கொடுக்குமாறு உரிமையாக கோரிக்கை விடுத்தார் அங்கிருந்த மூதாட்டி ஒருவர்.
அதற்கென்ன எடுத்துக் கொடுத்தால் போச்சு என்றவாறு தனது பர்ஸில் இருந்து சொந்தப் பணத்தை எடுத்து அந்த மூதாட்டிக்கு கொடுத்து உதவியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள துரை ரவிச்சந்திரன் வெறுமனே ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு கோப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல் கள ஆய்வில் கலக்கி வருகிறார்.

தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியராக புதிதாக பதவியேற்றுள்ள துரை ரவிச்சந்திரனின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்களை கவரும் வகையில் அமைந்திருக்கின்றன. இவர் பதவியேற்ற அன்றே விவசாயிகளின் பிரச்சனைகளையும், குறைகளையும் தீர்க்க முன்னுரிமை அளிப்பேன் என்று உறுதியளித்ததுடன் பொதுமக்கள் எந்த நேரமும் தன்னை சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். பதவியேற்கும் போது எல்லோரும் சொல்வது தானே என்று நினைத்தவர்களுக்கு தனது செயல்பாடுகளால் சொல்லை மெய்யாக்கியுள்ளார்.

சேலை எடுத்துக் கொடுங்க
இதனிடையே தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தில் நேற்று ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனை மறித்த மூதாட்டி ஒருவர், ''எனக்கு ஒரு சீல எடுத்துக் கொடுங்க'' என உரிமையாக கேட்டார். இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் ஒரு நொடி திகைத்துப் போனார்கள். என்ன இந்தம்மா கலெக்டரையே சேலை எடுத்துக் கொடுக்கச் சொல்லுது என அவர்களுக்குள் முணுமுணுக்கவும் செய்தார்கள்.

ஆட்சியர் ரவிச்சந்திரன்
ஆனால் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனோ, மூதாட்டி யதார்த்தமாக கேட்பதை உணர்ந்து அவருக்கு தனது பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து உதவினார். நீங்க நல்லாயிருக்கணும்யா என ஆட்சியரை அந்த மூதாடி மனமார வாழ்த்தினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் வீடு கட்டும் திட்டம் குறித்து முறையிட்ட மூதாட்டி, தனக்கு அதிலுள்ள சில நடைமுறைகள் புரியவில்லை எனக் கூறியிருக்கிறார். உடனே எங்கே வி.ஏ.ஒ. இங்கே வாங்க இந்தம்மாவுக்கு தேவைப்படும் உதவிகளை செய்துக் கொடுங்க என ஆன் தி ஸ்பாட்டில் உத்தரவிட்டார்.

இயற்கை எழில் கொஞ்சும்
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கிராமங்கள் அதிகம் அடங்கிய இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு ஆட்சியராக வந்துள்ள ரவிச்சந்திரன் தினமும் ஒரு பகுதிக்கு கள ஆய்வு நடத்த புறப்பட்டுவிடுகிறார். அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபடுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி வரும் வேளையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் கலக்கிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications