தென்காசி விஏஓ பத்மாவதி.. போயும் போயும் இப்படியா அசிங்கப்படணும்.. கிராம நிர்வாக அதிகாரிக்கு வந்த ஆசை
தென்காசி: பட்டா மாறுதல் செய்வதற்காக விண்ணப்பித்துவிட்டு, தென்காசி விஏஓ அலுவலகத்துக்கு சென்றுள்ளார் குமாரவேல். அங்கு நடந்த சம்பவம், வருவாய்த்துறை, பதிவுத்துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறார்கள்.
அளவுக்கு அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை விளங்கி கொண்டிருக்கிறது. இதை மையமாக வைத்தே லஞ்ச லாவண்யங்கள் இந்த துறையில் பெருகி கொண்டிருக்கிறது. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இப்படியான லஞ்சத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

விஏஓ சிறைதண்டனை: சில நாட்களுக்கு முன்பு, லஞ்சம் வாங்கிய விருதுநகர் விஏஓவுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருந்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள டிமானகசேரியில் விஏஓ-வாக பணியாற்றிய அம்மையப்பன், கடந்த 2010-ல் வாரிசு சான்று வழங்குவதற்காக சுப்பையா பாண்டி என்பவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியிருக்கிறார்.
கடந்த 2019-ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் 3 வருட சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்த நிலையில், இதை எதிர்த்து அம்மையப்பன், மதுரை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், விஏஓ அம்மையப்பனுக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதுபோலவே, வேலூர் விஏஓவும் 10 நாட்களுக்கு முன்பு சிக்கினார்.. சரஸ்வதி தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று வேலூரில் விண்ணப்பித்திருந்த நிலையில்,சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த ஷர்மிளா (59) ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஷர்மிளாவிடம், சரஸ்வதி தந்ததுமே, அதிகாரிகள் விஏஓவை சுற்றி வளைத்துவிட்டார்கள்.
தென்காசி விஏஓ: இப்போது, தென்காசி விஏஓ வசமாக சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்.. தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல். இவர், ராஜகோபாலகேரி கிராமத்தில், தன்னுடைய அப்பாவின் பெயரில் உள்ள சொத்தை தனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய கிராம விஏஓ பத்மாவதியை அணுகியிருக்கிறார்.. அதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி சொல்லவும், அதன்படியே விண்ணப்பித்துள்ளார்.
பிறகு மீண்டும் விஏஓ பத்மாவதியை குமாரவேல் தொடர்பு கொண்டார். அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என பத்மாவதி சொன்னாராம்.. அவ்வளவு பணம் இல்லை என்று குமாரவேல் சொல்லியிருக்கிறார்.. அப்படியானால், ரூ.4,500 தர வேண்டும் என்றும், அதனை கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும் என்றும் கறாராக சொன்னாராம்.
அசிங்கம்: இதனை கொடுக்க விரும்பாத குமாரவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை குமாரவேல் கொடுத்துள்ளார்.. அதனை வாங்கிய பத்மாவதியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பெண் விஏஓ தென்காசியில் வசமாக சிக்கியிருப்பது, அரசுத்துறை அதிகாரிகளிடையே மீண்டும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications