கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு காதல் மோதல்.. பெண்ணின் தந்தை தற்கொலை முயற்சியால் டென்ஷன்!
கிருஷ்ணகிரி: இரு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும், இளைஞரும் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டதால், கிருஷணகிரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வீட்டை விட்டு போன பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயற்சித்ததால் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஓசூர் அருகே உள்ள இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பெண்ணும் பையனும். இருவரும் வேறு வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு வீடுகளில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
இதையடுத்து அப்பெண்ணின் தந்தை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை பெங்களூரில் உள்ள செயின்ட் ஜான் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்துள்ளனர். அவர் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த காதல் விவகாரம், தற்கொலை முயற்சியால் இரு கிராமங்களிலும் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு கெலமங்களம் போலீஸார் விரைந்துள்ளனர். கூடுதல் போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய இளைஞரின் பெயர் குபேந்திரன் என்றும், சந்தனப்பா என்பவரின் மகன் என்றும் தெரிய வந்துள்ளது. குபேந்திரனுக்கு வயது 24. பெண்ணின் பெயர் தீபா. 22 வயதாகிறது.
இருவருமே ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களது முடிவால் இரு கிராமங்களிலும் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பெண்ணின் தந்தை ராஜப்பாவை சிலர் மிரட்டியதாக வந்த புகாரைத் தொடர்ந்து இதுதொடர்பாக திம்மராஜ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இப்படித்தான் தர்மபுரியில் பெரும் காதல் கலவரம் வெடித்து சில ஊர்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைசியில் காதலித்த பெண் காதலனை கைவிட்டதால் காதலன் தற்கொலை செய்யும் நிலைமையும் ஏற்பட்டது. இந்த நிலையில் அருகில் உள்ள கிருஷ்ணகிரியில் அதே மாதிரியான காதல் மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications