தொடங்கியது ஜோதி தரிசனம்.. தைப்பூச விழாவையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் குவியும் பக்தர்கள்
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் 154வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்று வருகிறது. சத்திய ஞான சபையில் 7 திரைகளை நீக்கி காட்டப்படும் ஜோதி தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் வள்ளலார். சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி பல்வேறு சீர்த்திருத்தங்களை வள்ளலார் செய்தார்.

"இறைவன் அன்பு வடிவமானவன்; அவன் எங்கும் ஜோதி வடிவமாக நிறைந்திருக்கிறான்" என்று கூறி சீர்த்திருத்தங்களை செய்து புகழ்பெற்றார் வள்ளலார். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற சத்திய ஞான சபை உள்ளது.
சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தில் ஆறு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். அதேபோல் ஆண்டுதோறும் தைப்பூசம் தினத்தில் மட்டும் 7 திரை விலக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படும்.
1874 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, புனர்பூசமும், பூசமும் இணைந்த நாளில் வள்ளலார் ஸித்தி அடைந்தார். அப்போது அவருக்கு வயது 50 தான். உடம்போடு, இறைவனோடு ஜோதி வடிவமாக கலந்தார். இதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூசம் நட்சத்திரம் அன்று ஏழு திரை விளக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கமாக உள்ளது.
அதன்படி இன்று தைப்பூச நாளில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம் நடந்தது. இதையடுத்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி மற்றும் 10 மணிக்கும், 12-ம்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர் நாளை மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திரு அறை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.
முன்னதாக தைப்பூச விழாவையொட்டி 7 திரைகளை விலக்கி காட்டப்படும் ஜோதி தரிசனத்துக்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. காலை 7.30 மணியளவில் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணியளவில் சத்திய ஞான சபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. அதன்பிறகு தான் இன்று ஜோதி தரிசன விழா தொடங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications