கந்தனுக்கு அரோகரா.. பழனி கோயிலுக்கு காவடி எடுத்து சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை
பழனி: தைப்பூசம் இன்று தமிழகம் எங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு மயில் காவடி சுமந்து சென்று முருகனை வழிபட்டார்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் இன்று தமிழகம் எங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமின்ற அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே கோவில்களில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலையில் இருந்தே பக்தர்களும் முருகனை வழிபட்டனர்.

மாலை அணிவித்து நடந்தபடியே கோவிலுக்கு சென்றும், காவடி தூக்கியும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் முருகன் கோவில்களுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். குறிப்பாக வடபழனி முருகன் கோவிலிலும் இன்று அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களின் வருகைக்காக இன்று அதிகாலையில் 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது.
திருப்பள்ளி முடிந்து 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் குடும்பம் குடும்பமாக பக்தர்கள் கோவிலுக்கு அதிகாலை முதலே வருகை தந்தனர். நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் பாதயாத்திரையாக மாலை அணிந்து பக்தர்கள் வருகை தந்தனர்.

கார்கள், வேன்களிலும் பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பழனி முருகன் கோவிலுக்கு காவடி சுமந்து சென்று வழிபட்டார். காலையில் காரில் பழனிக்கு வந்த அண்ணாமலை, பழனி அடிவாரத்தில் இருந்து மயில் காவடி எடுத்தார். காவடியை சுமந்தபடி பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா.. என்று கூறியபடியே அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் முருகனை வழிபட்டனர்.
முன்னதாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அண்ணாமலை மற்றும் கட்சியினர் பக்தர்கள் வெளியேறும் பாதையில் சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து, இது பக்தர்கள் வெளியேறும் பாதை எனவே, மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் அந்த வழியாகவே சென்று முருகனை வழிபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக அண்ணாமலை தைப்பூசத்துக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications