பள்ளிக்குப் படை எடுத்த பிள்ளைகள்.. ஸ்டாலின் டெக்னிக் செம.. நம்ம ஜவ்வாது மலை பள்ளியா இது?
திருவண்ணாமலை: காலை உணவு என்பது பலருக்கும் கனவு. அந்தக் கனவைத் தினமும் நிஜமாக்கித் தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர் கொண்டுவந்த காலை உணவுத் திட்டத்தால், ஒளி பெற்று இருக்கிறது ஜவ்வாது மலையில் உள்ள பெருங்காட்டூர் பள்ளி.
இங்கே படிக்கும் பல குழந்தைகள் பல ஆண்டுகளாகக் காலை உணவைக் கண்களால் கூடப் பார்த்ததில்லை. காரணம், வறுமை. பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர் கூலித் தொழிலாளிகள்.
ஆகவே, அரிசி வாங்கி, அதை அரைத்து இட்லி போட்டு குழந்தைகளுக்கு ஊட்டுவது எல்லாம் நடைமுறையில் இல்லாத காரியம். அப்படிப் பசி பட்டினியுடன் பள்ளிக்குப் போன பிள்ளைகளிற்குப் பசி தீர்க்கும் அட்சய பாத்திரமாக மாறி இருக்கிறது ஸ்டாலின் கொண்டுவந்துள்ள இத்திட்டம்.

இது குறித்து பெருங்காட்டூர் ஊராட்சி தொடங்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.எஸ்.சாமுவேல் ராஜா, "எங்க பள்ளிக்கூடம் ஜவ்வாது மலையில்தான் இருக்கிறது. இது ஒரு குக்கிராமம். இங்கே ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையான பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள்.
மொத்தம் 500 பிள்ளைகள் வரை உள்ளனர். இது மலைக்கிராமம் என்பதால் அதிக அக்கறை எடுத்து மாணவ செல்வங்களைப் பள்ளிக்குக் கொண்டு வந்து படிப்புச் சொல்லிக் கொடுத்து வருகிறோம்.
எல்லோரும் மலைவாழ் பகுதியில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள். காலையிலேயே பெற்றோர் வயல்வேலைகளுக்குச் சென்றுவிடுவார்கள். பெரும்பாலும் பிள்ளைகள் காலை உணவை எடுத்துக் கொள்ளாமல்தான் படிக்க வருவார்கள்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத்திட்டம் கொண்டுவந்த பிறகு அந்தக் கவலை முற்றிலும் இல்லை. எல்லோரும் பள்ளிக்குச் சரியான நேரத்தில் வருகை தந்துவிடுகிறார்கள். காரணம் காலை உணவுத் திட்டம்தான். அந்தளவுக்கு இந்தக் காலை உணவுத்திட்டம் எங்கள் பள்ளியைப் பொறுத்தளவில் மிகச் சிறப்பாகப் பயனளித்து வருகிறது " என்கிறார்
மேலும் அவர், "இந்தக் காலை உணவுத்திட்டத்தை முதன்முதலாக எங்கள் பள்ளியில் தொடங்கும்போதே 200 மாணவர்களுக்கு உரியத் தட்டு, டம்ப்ளர் எல்லாம் தனித்தனியே வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.
அதனால் அனைத்து மாணவர்களும் ஒரே சமயத்தில் உட்கார்ந்து சாப்பிட முடிகிறது. ஒருவர் சாப்பிடும் போது மற்றொரு மாணவர் தட்டுக்காகக் காத்திருக்கும் நிலை சுத்தமாக இல்லை. அது மகிழ்ச்சியான விஷயம்.

காலை உணவு என்றால் சும்மா இல்லை. தரமான, அதுவும் ஆரோக்கியமான சிறு தானியங்களைப் போட்டுத் தயாரித்த சத்தான உணவை அரசு குழந்தைகளுக்குக் கொடுத்து வருகிறது. வாரம் முழுவதும் விதவிதமான உணவுகளை அரசு வழங்கி வருவதால் பிள்ளைகள் முகம் கோணாமல் உற்சாகமாகச் சாப்பிடுகிறார்கள் " என்கிறார்
இடைநிலை ஆசிரியர் முருகன், "இந்தப் பள்ளியில் நான் ஒரு வருஷமாக பணியாற்றி வருகிறேன். முன்பு எல்லாம் காலை இறைவணக்கம் பாடும் போது பல பிள்ளைகள் மயங்கி கீழே விழுந்துவிடுவார்கள். காரணம், பலர் காலை உணவை உட்கொள்ளாமல் வருவார்கள். அதனால் மயக்கம் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது.
இப்போது அந்த பிரச்சினை முற்றிலும் இல்லை. காலை உணவைப் பள்ளியிலேயே சாப்பிட்டுவிடுவதால், மிக உற்சாகமாக வகுப்பறையில் பாடம் படிக்கிறார்கள். இந்த மாற்றம் எங்களைப் பொறுத்தவரை மாபெரும் மாற்றம்" என்கிறார்.

"ஜவ்வாது மலையை பொறுத்தளவில் பெரும்பாலானக் குடும்பங்கள் கூலித் தொழில் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். காலை ஆறு மணிக்கே எல்லோரும் வயல் வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.
காலை உணவு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. அந்தப் போதாமையை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த திட்டம் முழுமையாக இட்டு நிரப்பி உள்ளது" என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ்
"இந்த மலைக்குப் பிள்ளைகளைக் கொண்டுவர இலவச பேருந்து கொடுத்திருக்கிறார்கள். திரும்ப அழைத்துப் போக அதேபோல பேருந்து வந்துவிடும். அதனால் போக்குவரத்து பிரச்சினை என்பது பிள்ளைகளுக்கு இல்லை. அடுத்து காலை உணவு. அதையும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்துவிட்டார். மதிய உணவு முன்பே போட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே அதுவும் பிரச்சினை இல்லை. சுருக்கமாகச் சொன்னால் காலையில் பிள்ளைகள் பள்ளிக்குப் படிக்கவந்தால் போதும். மாலைவரை வேறு எந்தக் கவலையும் இல்லாமல் பிள்ளைகளைப் படிக்கவைத்து வீட்டுக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கிறோம்" என்கிறார் தலைமையாசிரியர் சாமுவேல் ராஜா.

"திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம் இரண்டு நகராட்சிகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலில் திருவண்ணாமலை நகராட்சி. இதில் உள்ள 14 ஆரம்ப பள்ளிகள் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகின்றன. இதில் பயிலும் 872 பிள்ளைகள் இத்திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
அடுத்து செய்யாறு நகராட்சி. இதற்குள்ளாக 7 ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 467 பிள்ளைகள் இங்கே பயன்பெற்று வருகின்றனர். இதைத்தாண்டி வருவதுதான் இந்த ஜவ்வாது மலை ஒன்றியம். அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு இத்திட்டம் ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகச் செயல்பட்டு வருகிறது. ஆக, கிட்டத்தட்ட மொத்தமாக 1928 பிள்ளைகள் இந்தக் காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்து வருகிறார்கள்" என்கிறார் எ.வ.வே. கம்பன்
"இந்த ஜவ்வாது மலை மக்களின் பிரச்சினை என்னவென்றால், இங்குள்ள அனைத்து மக்களும் கூலித்தொழிலாளிகள். வேலைத் தேடி அவர்கள் வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை.
ஆகவே காலையிலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டு விடுவங்கள். அப்படிச் சென்றால்தான் வேலை கிடைக்கும். குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். அதனால் பெரும்பாலான வீடுகளில் காலை உணவைச் சமைப்பதில்லை. பிள்ளைகள் காலை உணவு சாப்பிட்டதே இல்லை.
இந்தக் காலை உணவுத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த பிறகுதான் பல குழந்தைகள் காலை உணவையே கண்களால் பார்த்திருக்கிறார்கள்" என்கிறார் இந்தப் பெருங்காட்டூர் ஊராட்சி பள்ளி ஆசிரியை ஒருவர்
இவர் சொல்வது முழு உண்மை. இந்தக் கிராமத்தில் பெயருக்குக் கூட ஒரு உணவகம் இல்லை. வெளியே சென்று பிள்ளைகள் சாப்பிடவும் முடியாது. பட்டினி கிடப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அப்படிக் காய்ந்து கிடந்த பிள்ளைகளில் வயிற்றில் முதல்வர் ஸ்டாலின் இப்போது பால் வார்த்திருக்கிறார்.
ஆசிரியை ரம்யா மனோகர், "இந்தக் காலை உணவுத்திட்டத்தால் இடைநிற்றல் குறைந்துள்ளது. காலை குழந்தைகள் சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு வந்துவிடுகிறார்கள். வருகைப் பதிவும் அதிகரித்துள்ளது.
இந்தப் பெருங்காட்டூர் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை முன்பு 180தான் இருந்தது. காலை உணவுத்திட்டம் வந்த பிறகு 250 ஆக உயர்ந்துள்ளது" என்கிறார்
"இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் எங்கள் மாவட்டத்தில் மூன்று இடங்களில் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை, செய்யாறு அடுத்து ஜவ்வாது.

முதற்கட்டமாக 65 பள்ளிகள் இத்திட்டத்தால் பயன்பெற்றன. கிட்டத்தட்ட 3235 குழந்தைகள் காலை சிற்றுண்டி உணவைத் தினமும் சாப்பிட்டு வருகிறார்கள். அதற்காக நான் குழந்தைகள் சார்பாக முதல்வருக்கு நன்றியைத் தெரித்துக் கொள்கிறேன்.
எங்கள் மாவட்டத்தில் 1 முதல் 5 வரையான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளாக உள்ளனர். அதற்கு முக்கியமான காரணம், அவர்கள் பெரும்பாலும் காலை உணவை எடுத்துக் கொள்வதில்லை என ஆய்வு ஒன்று கூறுகிறது" என்கிறார் மாவட்ட ஆட்சியர்.
இவர் சொல்வது உண்மைதான். இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஒரு சம்பவத்தை நினைவு கூறினார். "நான் அடிக்கடி சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆய்வு செய்வதற்காகப் போவேன்.
அப்படி ஒருமுறை சென்ற போது ஒரு குழந்தையிடம் பேசினேன். அவள் சோர்வாக இருந்தால். என்ன என்று கேட்டேன். காலையில் சாப்பிடவில்லையா என்றேன். அவள் ஆம் என்றாள். வழக்கமாக நாங்கள் காலை வேளைகளில் சாப்பிடுவதில்லை என்றதும் எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது.
அதன்பிறகு தான் அதிகாரிகளை நான் ஆலோசித்தேன். நிறையப் பிள்ளைகள் காலை சாப்பிடாமல் தான் வருகிறார்கள் என்பதை அறிந்தேன். அதற்காகவே இந்தக் காலை உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்தேன்" என்றார்

இத்திட்டம் மூலம் ஒரு குழந்தைக்கு 12 ரூபாய் 75 காசை அரசு செலவு செய்கிறது. அதற்குக்கூட முதல்வர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்தார். இந்த 12 ரூபாய் 75 காசு செலவு என்பதை ஒரு நிர்வாக மொழியில் சொல்கிறேன். உண்மையில் இது செலவு இல்லை; அரசின் கடமை என்றார்.
இந்தக் கடமை வருங்கால தலைமையை மடமையிலிருந்து மீட்கப் போகிறது என்பது எவ்வளவு பெரிய செய்தி.












Click it and Unblock the Notifications