நெல்லை அதிகாரி தற்கொலை: சிக்கிய தொலைபேசி அழைப்புகள்… அதிமுக பிரமுகரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
திருநெல்வேலி: நெல்லையில், கடந்த 20 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தொலைப்பேசி அழைப்பு விபரங்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் அவரிடம் பேசிய அதிமுக பிரமுகரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாளை திருமால்நகரை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி (வயது 57). நெல்லை வேளாண்மை பொறியியல் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மாதம் 20ஆம்தேதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
வேளாண்மை பொறியியல் துறையில் காலியாக உள்ள 7 டிரைவர் பணியிடத்துக்கு புதிய டிரைவர்கள் நியமிக்கும் பிரச்சினையில் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கொடுத்த நெருக்கடியால் அவர் தற்கொலை செய்ததாக அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
எனவே வேளாண் அதிகாரி தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அமைச்சரின் உதவியாளர்
வேளாண்மை துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் உதவியாளராக இருந்த பூவையா மற்றும் முத்துகுமாரசாமியின் செல்போனில் பதிவாகி உள்ள எண்கள் மற்றும் டைரியில் உள்ள தகவல்களை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுவரை 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. டிரைவர் பணியிட நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொலைபேசி அழைப்புகள்
முக்கிய ஆதாரமாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் நம்பி இருப்பது முத்துக்குமாரசாமியின் தொலைபேசி அழைப்புகளைத்தான். பிப்ரவரி 20-ம் தேதி, கடைசியாக முத்துகுமாரசாமியின் செல்போனுக்கு பகல் 11.23 மணிக்கு ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்துள்ளனர்.

பேசியது யார்? யார்?
20ஆம் தேதி காலை 7.31 மணிக்கும் 9.17 மணிக்கும் முத்துக்குமாரசாமியுடன் வேலை பார்க்கும் பீட்டர் என்பவர் பேசி இருக்கிறார். 10.19 மணிக்கு காளிராஜ் என்ற புல்டோசர் ஆபரேட்டர் பேசியுள்ளார் என்று போலீஸார் சொல்கிறார்கள். அதன்பிறகு பகல் 11.23 மணிக்கு கடைசியாக ரங்கராஜன் என்பவர் பெயரில் உள்ள செல்போனில் இருந்து ஒருவர் பேசியுள்ளார்.

தற்கொலைக்கு முன்
கடைசி போன் காலுக்கும் அவர் தற்கொலை செய்து கொண்ட நேரத்துக்கும் இடையில் சுமார் ஒரு மணிநேரம் இருந்திருக்கிறது. இடைப்பட்ட அந்த நேரத்தில் அவருடன் யாரும் பேசவில்லை. அந்த நேரத்தில், நெல்லையைச் சேர்ந்த ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் வீட்டில்தான் முத்துக்குமாரசாமி இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.

மொத்தம் எத்தனை அழைப்புகள்
முத்துக்குமாரசாமியின் அழைப்பு விபரங்களை ஆய்வு செய்த போது, கடந்த இரண்டு மாத காலத்தில் அவரது அலுவலகத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிகளவில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.
ஜனவரியில் முத்துக்குமாரசாமி செல்போனுக்கு வந்துசென்ற அழைப்புகள் எண்ணிக்கை 545. பிப்ரவரி மாதம் 20-ம் தேதி வரை 691 அழைப்புகளை அட்டெண்ட் செய்துள்ளார். இந்த எண்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

போலியான முகவரிகள்
இப்படி வந்துள்ள அழைப்புகளில் சில செல்போன் எண்களுக்கான அட்ரஸ் போலியானது என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த எண்களின் அழைப்புகள் எந்த ஏரியாவில் இருந்து வந்துள்ளன என்பதை விசாரித்து வருகிறார்கள். அதேபோல், அடையாளம் தெரியாத பலரிடம் அவர் பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது.

அதிமுக பிரமுகர்கள்
முத்துகுமாரசாமியின் செல்போனில் பதிவாகியுள்ள எண்களில் நெல்லையை சேர்ந்த சில அ.தி.மு.க. பிரமுகர்களின் எண்களும் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த எண்களுக்கு போன் செய்து விசாரணை நடத்தும் அதிகாரிகள், அதில் பேசும் நபர் எந்த பொறுப்பில் இருக்கிறார், அவருக்கும் வேளாண் அதிகாரிக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஜராக உத்தரவு
மேலும் தேவைப்பட்டால் நேரில் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் நெல்லையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சில அ.தி.மு.க.வினரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

குடும்பத்தினரிடம் விசாரணை
நெல்லை சென்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார் முத்துக்குமாரசாமியின் மனைவி, மகன் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துள்ளனர். அவர்கள், 'இது தற்கொலை அல்ல' என்று சொன்னார்களாம். முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு விடை கிடைக்கும்போது அது பலரது எதிர்காலம் ஆட்டம் காணும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications