மழை வெள்ளம் பாதித்த தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
கடலூர்: மழை வெள்ளத்தால் தமிழகத்தில் சேதமும், அனைத்து தொழில்களும் பாதிப்பு அடைந்துள்ளதால் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி அடுத்துள்ள எஸ்.ஏரிப்பாளையம் காலனி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை சரத்குமார் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், யாரும் எதிர் பாராத பெரும் இடர் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசே பேரிடர் என அறிவித்துள்ளது.

மாநில அரசு நிவாரண உதவிகளை துரிதப்படுத்திய நிலையில் தொடர் மழையால் காலதாமதம் ஏற்பட்டது. குப்பைகள் சேர்ந்துள்ளதால் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அனைவரும் குழுவாக இணைந்து அகற்ற வேண்டும்.
நிவாரண உதவி தேவைப்படுவோர் எங்களது தொலைபேசி, அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அடுத்த 24 மணி நேரத்தில் உதவி வழங்க தயாராக உள்ளோம். நிவாரண உதவி வழங்கும் இடத்தில் பொதுமக்களின் குறைகளையும் கேட்டு அறிந்து வருகிறேன். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அதிகம் தரவேண்டும்.
கனமழை வெள்ளத்தால் தமிழகத்தில் சேதமும், தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு அதிகம் நிதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என சரத்குமார் கூறினார்












Click it and Unblock the Notifications