ஆட்சி நடக்கவில்லை சர்க்கஸ் தான் நடக்கிறது.. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும்.. சீறிய ஈபிஎஸ்
சென்னை: கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் இங்கே ஆட்சி நடக்கவில்லை.. சர்க்கஸ் தான் நடக்கிறது என்றும் கூறியுள்ளார் .
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் விஷசாராயம் வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் விஷசாராயம் குடித்ததில் எக்கியார் குப்பத்தில் 14 பேரும் சித்தமூரில் 8 பேரும் என 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஷசாராயம் அருந்தியதில் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே, விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவி தொகையை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: - செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்கிறவருடைய தம்பி ஆவார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக அவரும் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார். இந்த நிலையில் போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு இந்த அரசு அதை போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது.

இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும். சில நாட்களுக்கு முன்னால் ஒருவர் தன்னை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று பொய் சொல்லி முதல்வரை சந்தித்து பரிசு பெற்று செல்கிறார். தற்போது என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவர்க்கு அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்துலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியில் உள்ள திமுகவின் விடியா அரசு தான்! நிர்வாக திறன் அற்ற முதல்வரின் தலைமையில் ஆட்சி நடக்கவில்லை.. இங்கே சர்க்கஸ் தான் நடக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications