நினைவுச் சின்னங்களை அமைத்து அழகு பார்த்த அஞ்சுகம் அம்மையாரின் மகன்!

திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் அமைத்துள்ள நினைவுச்சின்னங்கள் என்றும் அவரது பெயரை சுமந்தபடியே இருக்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் அமைத்துள்ள நினைவுச்சின்னங்கள் என்றும் அவரது பெயரை சுமந்தபடியே வீற்றிருக்கும்

திமுக தலைவராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள கருணாநிதி தனது அரசியல் வாழ்வில் பொன் விழா கண்டவர். 5 முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று அலங்கரித்தவர்.

ஒவ்வொரு முறையும் நினைவுச்சின்னங்களை அமைத்து அழகுபார்த்தவர் கருணாநிதி. திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது செய்த சாதனைகள் எண்ணிலடங்காது.

 சிலப்பதிகார கலைக்கூடம்

சிலப்பதிகார கலைக்கூடம்

தமிழ் இலக்கியத்தின் மீது பேரார்வம் கொண்ட கருணாநிதி சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன் கோவலன் தலைவி கண்ணகி வாழ்ந்த நகரமான பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடத்தை அமைத்தார். சோழப்பேரரசின் மிகச்சிறந்த நகரங்களுள் ஒன்றான இந்நகருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. சிலப்பதிகாரத்தின் நினைவாக இங்கு ஏராளமான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணகிக் கோட்டம் என்ற பகுதியில் கண்ணகி சிலை அமைந்துள்ளது.

 சிலம்பு வடிவ கதவுகள்

சிலம்பு வடிவ கதவுகள்

இலஞ்சி மன்றத்தில்தான் பண்டைய கால வரலாற்றின்படி குளம் அமைந்திருந்தது. இங்கே மூன்று கட்டிட அமைப்புகள் ஒருங்கே சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் இருமருங்கிலும் குளங்கள் உள்ளன. இக்கட்டிடத்திற்கு இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் உள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்பு வடிவை ஒத்ததாய் இருக்கின்றன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

 பிரமிக்க வைக்கும் சிற்பங்கள்

பிரமிக்க வைக்கும் சிற்பங்கள்

கண்ணகி சிலை, மாதவியின் சிலை, சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் சிலம்பு வடிவ குளம், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளின் சிலை, ஆட்சி புரிந்த கரிகால் சோழனின் சிலை மற்றும் சிலப்பதிகாரக் கதையில் வரும் 49 நிகழ்ச்சிகள் ஆகியவை பிரமிப்பூட்டும் வகையில் கற்சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

 வள்ளுவர் கோட்டம்

வள்ளுவர் கோட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவரின் மீது கொண்ட பற்றால் 1973 ஆம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இங்கு 128 அடி உயரத்தில் திருவாரூர் தேரை ஒத்த பளிங்கு கல்லால் ஆன தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்ததேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இத் தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் சிற்பங்களால் அழகூட்டப்பட்டுள்ளது.

 பொறிக்கப்பட்ட குறள்கள்

பொறிக்கப்பட்ட குறள்கள்

இங்குள்ள அரங்கத்தின் ஒரு பகுதியில் மேல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறள் மணிமாடம் என அழைக்கப்படுகின்றது. திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

 குமரிக்கடலில் சிலை

குமரிக்கடலில் சிலை

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு என சிலை அமைத்தவரும் கருணாநிதிதான். இந்த திருவள்ளுவர் 133 அடி உயரம் கொண்டது. உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை எங்குமே கிடையாது. சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது. மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

 செம்மொழி பூங்கா

செம்மொழி பூங்கா

சென்னையில் செம்மொழி பூங்காவை அமைத்தவரும் கலைஞர் கருணாநிதிதான். செம்மொழி பூங்கா, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். சாலை ஓரத்தில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழி பூங்காவை அமைத்துள்ளது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

 வெர்ட்டிக்கல் கார்டன்

வெர்ட்டிக்கல் கார்டன்

தென்னிந்தியாவுக்கே புதிதான வெர்ட்டிக்கல் கார்டன்தான் பூங்காவின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட போன்சாய் மரங்கள், வண்ண விளக்குகள் நிறைந்த நீருற்று, நீரோடை, குற்றாலத்தை நினைவூட்டும் அருவி, வாத்துகள் வாழும் குளம் ஆகியவை இப்பூங்காவின் சிறப்பம்சங்கள். இப்பூங்காவைச் சுற்றிப்பார்க்க வேண்டுமானால் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகும்.

 அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணாவின் மேல் கொண்ட காதலால் சென்னை கோட்டூர்புரத்தில் அனைவரும் பிரமிக்கும் வகையில்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தவரும் இந்த கருணாநிதிதான். தமிழக மக்களால் அன்புடன் "அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதியன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

 ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும்

ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும்

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே மிகப் பெரியது. இந்த நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இப்படி ஏராளமான நினைவு சின்னங்களை அமைத்து அழகுபார்த்தவர் கருணாநிதி. ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் கருணாநிதியின் பெயரை தாங்கி அவர் அமைத்த நினைவுச்சின்னங்கள் கம்பீரமாய் வீற்றிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+