முஸ்லீம்தான்.. ஆனால் அங்கீகரித்தார்! பங்காரு அடிகளார் இறுதி நிகழ்ச்சியில் நெகிழ்ந்த இஸ்லாமியர்கள்
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மறைந்தார். இன்று அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் அவருக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்னமும் சில கோயில்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், கோயில் கருவறைக்குள் சாதி/மத பாகுபாடின்றி பக்தர்களை அனுமதித்து பெரும் சமய புரட்சியே பங்காரு அடிகளார் நடத்தினார். அதிலும் குறிப்பாக பெண்களையும் கோயில் கருவறைக்குள் அனுமதித்து வழிபாட்டு உரிமையை இவர் வழங்கியது, லட்சக்கணக்கான பக்தர்களை இவருக்கு உருவாக்கியது. மறுபுறம் இஸ்லாமியரை கோயில் குருக்களாகவும் இவர் நியமித்திருக்கிறார்.

இது குறித்து பங்காரு அடிகளாரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூறுகையில், "நாங்கள் ஆம்பூரிலிருந்து வருகிறோம். பங்காரு அடிகளாரின் மறைவு செய்தியை முதலில் நாங்கள் நம்பவில்லை. டிவி, பத்திரிகைகளில் செய்தி வெளியானபோதுதான் உண்மை தெரிய வந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, எல்லோரும் குடும்பமாக இங்கு வந்துவிட்டோம். ஆம்பூர் அருகே ஞானமலையில் ஓம் சக்தி கோயில் இருக்கிறது. எங்களுக்கு அப்படிதான் முதன் முதலாக பங்காரு அடிகளாரை தெரியும்.
இந்த மலையின் கீழே விநாயகர் கோயிலும், உச்சியில் முருகன் கோயிலும் இருக்கிறது. இரண்டு கோயில்களிலும் பூஜைகளை மேற்கொள்ள குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் இருக்கிறார். ஆனால் இதற்கு இடையில் உள்ள ஓம் சக்தி கோயிலில் என்னை போன்ற சாமானிய மக்கள்தான் பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இக்கோயிலின் பூசாரியாக, குருக்களாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் இருந்தார். இவருடைய குடும்பத்தினர் அனைவரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இருப்பினும் இவரது திருப்பணியை யாரும் குறுக்கிடவில்லை. இதெல்லாம் இந்து கோயில்களில் மிகப்பெரிய மாற்றங்கள். எங்கள் வீட்டு பெண்கள் கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்தது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்த்தோம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல இறுதி அஞ்சலி செலுத்த வந்த இஸ்லாமியர்கள் கூறுகையில், "பங்காரு அடிகளாரின் மறைவு செய்தி ஒரு புரளியாக இருக்கக்கூடாதா? என்று எங்களுக்கு நாங்களே கேள்வி கேட்டுக்கொண்டோம். ஆனால் இந்த செய்தி உண்மையாக இருப்பது மிகவும் துயரமளிப்பதாக இருக்கிறது. இந்த கோயிலை பொறுத்த அளவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்கிற வேறுபாடு கிடையாது" என்று கூறியுள்ளார். அதேபோல, "நாங்கள் திண்டிவனத்திலிருந்து வருகிறோம். இந்த மறைவு செய்தி எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும், எங்களுடன் ஓம் சக்தி பீடத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களை போல பழகி வருகின்றனர். என்னால் எதையும் பேச முடியவில்லை" என்று துக்கம் தொண்டையை அடைக்க, நா தழுதழுக்க இஸ்லாமியர்கள் துக்கத்தை பகிர்ந்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications