For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் மறுக்கப்பட்டதன் பின்னணி

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதன் பின்னணி- வீடியோ

    -ராஜாளி

    திராவிடப் பெருந்தலைவர் கருணாநிதி கடந்த 7 -ம் தேதி மறைந்தபோது சிலநிமிடங்களில் அவர் 8-ம் தேதி மெரினாவில் அடக்கம் செய்யப்படுவார் என்று சில தொலைக்காட்சிகள் அறிவித்தன. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த அறிவிப்பு மாறியது. மெரினாவில் இடம் மறுக்கப்பட்டது மாறாக கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் தமிழக அரசு வழங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்பில் சட்ட சிக்கல்கள் இருக்கிறது, வழக்குகள் நிலுவையில் இருக்கிறது ஆகவே மெரீனா வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக நீதிமன்றம் சென்று தனக்கான உரிமையை பெற்றது. கருணாநிதி மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டார்.

    The reasons why Edapadi Palaniswamy government denied Marina for Karunanidhi

    உண்மையில் வழக்குகளும், சட்டசிக்கல்களும் இருந்தனவா அதனால்தான் அரசு மறுத்ததா என்ற கேள்விகளோடு சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சார்ந்த செந்திலை கேட்டோம் எடுத்த எடுப்பிலேயே இது அரசியல் வெஞ்சன்சுக்காக செய்யப்பட செயல். அரசு கூறிய இரு காரணங்களும் ஏற்புடையது அல்ல. வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றால் அந்த வழக்குகள் கூட ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்பதுதான்.

    இருந்தாலும் அந்த வழக்குகள் கூட திரும்ப பெறப்பட்டுவிட்டது அதோடு அந்த வழக்கு தொடர்பாக எந்த இடைக்கால தடையும் நீதிமன்றத்தால் இதற்கு முன்பு விதிக்கப்படவில்லை. ஆகவே அந்த காரணம் அடிபட்டுவிட்டது. அடுத்ததாக அண்ணா சமாதி இருக்கும் இடம் கூவத்தின் கரையோரம் வருவதால் அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு எந்தவித இடைஞ்சலும் இருக்க முடியாது. ஜெயலலிதா இறந்தபோது சென்னை மாநகராட்சி அவர்களின் அதிகாரத்தின் கீழ் வருவதால் உடனடியாக ஒரு தீர்மானத்தை போட்டு அந்த இடத்தில் அடக்கம் செய்தார்கள்.

    கருணாநிதி என்று வரும்போது அரசியல் காரணங்களுக்காவே இந்த தடை விதிக்கப்பட்டது. இப்போதுள்ள இளைஞர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியலை விரும்பவில்லை. ஒரு புகழ்வாய்ந்த தலைவர் இறந்தபோது இப்படிப்பட்ட செயலில் ஒரு அரசு ஈடுபடுகிறது என்றால் அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியவர் இனியாவது அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கவேண்டும்.

    இப்படி தலைவர்கள் இறந்தால் எங்கு அடக்கம் செய்வது அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையெல்லாம் தெளிவாக வகுக்க வேண்டும் மாறாக ஒரு மக்கள் தலைவர் இறந்தபிறகு அவரை இழிவு செய்யும் நோக்குடன் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்ள கூடாது. தமிழக அரசு இப்படி நடந்து கொண்டதால் அவர்களுக்கு கிடைக்க இருந்த வாக்குகளும் இல்லாமல் போகும் என்று பொங்கி தீர்த்தார் சட்டப்பஞ்சாயத்து செந்தில்.

    இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்காடிய திமுக வழக்கறிஞர் வில்சனை கேட்டபோது, அரசு குறிப்பிட்ட இரு காரணங்களின்படி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்றார்கள். வழக்குகளை தொடர்ந்த துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு, மற்றும் ட்ராபிக் ராமசாமி ஆகியோர் ஜெயலலிதா சமாதி கட்டுவதற்கு கடற்கரை ஒழுங்காற்று பகுதி சட்டப்படி அனுமதிப் பெறப்படவில்லை என்று கூறித்தான் வழக்கு தொடர்ந்தார்கள்.

    அப்போது இந்த வழக்கிற்கு எதிராக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இந்தப் பகுதி 1988 ம் ஆண்டிலேயே அடக்கம் செய்வதற்கான பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தப் பகுதி CZM-2 என்ற பிரிவின் கீழ் வருகிறது ஆகவே அவர்களின் அனுமதியோடு அந்த இடத்தில் கட்டடம் கட்ட முடியும். அந்தக் கட்டிடம் ஒரு குறிப்பிட்ட அளவிலான சதுர அடிகள் இருந்தால் மாநில அரசின் அனுமதியே போதுமானது ஆகவே ஜெயலலிதாவுக்கு நினைவுச் சின்னம் கட்டுவதற்கு எவ்வித சிக்கல்களும் இல்லை. இந்த வழக்கை திரும்பப் பெறும்போதும் வழக்கைத் தொடுத்த துரைசாமி இந்த காரணத்தை கூறித்தான் வழக்கை திரும்பப் பெற்றார்.

    இந்த நிலையில் ட்ராபிக் ராமசாமி வழக்கை வாபஸ் பெற முயற்சிக்கும்போது நீங்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று கூறி நீதிமன்றமே தள்ளுபடி செய்கிறது ஆக அரசு கூறியபடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற வாதம் அடிபட்டு போய்விடுகிறது.

    அடுத்ததாக என்ன சட்ட சிக்கல் என்று கேள்வியை நீதிமன்றத்தில் கேட்டபோது அது மனுதாரருக்கே தெரியும் என்ற பதிலைத்தான் அரசு கூறியது. பின்னர் மறுநாள் காலை முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ராஜாஜி, பெரியார் மற்றும் ஜானகி ஆகியோருக்கு மெரீனாவில் இடம் கொடுக்கப்படவில்லை. இந்த முடிவை கருணாநிதி முதல்வராக இருக்கும்போது எடுத்தார்.

    ஆகவே கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அவர் எடுத்த முடிவின்படியே மெரினாவில் அவரை அடக்கம் செய்யாமல் காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞர் கூறுகிறார்.

    ராஜாஜி, காமராஜர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர்கள் இவர்கள் அனைவரும் காந்திய வழியை பின்பற்றுபவர்கள் ஆகவே அவர்களுக்கு அங்கே இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் கருணாநிதி அண்ணாவின் வழியை பின்பற்றும் திராவிடத் தலைவர், அவர் அண்ணா சமாதி இருக்கும் இடத்தில்தான் அடக்கம் செய்யப்படவேண்டும், அந்த இடத்தில்தான் திராவிடக் கொள்கையை பின்பற்றிய எம் ஜி ஆர், மற்றும் எம் ஜி ஆரின் கொள்கையை பின்பற்றிய ஜெயலலிதா ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டிருக்கும்போது கருணாநிதிக்கு இந்த இடம் கொடுக்கப்படவேண்டும் என்பது கருணாநிதிக்குரிய அடிப்படை உரிமை.

    ஆகவே அவரது கருத்தியலுக்கு எதிராக அவரை காந்தி மண்டபத்தின் அருகே அடக்கம் செய்வது அவருக்கு செய்யும் அவமரியாதை என்று தனது வாதம் இருந்ததாக கூறிய வழக்கறிஞர் வில்சன் ஏன் கருணாநிதிக்கு இடமளிக்க கூடாது என்று வாதம் செய்தபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர், முதல்வராக இருப்பவர்களுக்கு மட்டும்தான் அந்த இடம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார், எந்த சட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று எதிர்கேள்வி கேட்கப்பட்டபோது அவர்களால் பதில் கூற முடியவில்லை என்றார் வழக்கறிஞர் வில்சன்.

    தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர் இது முழுக்க ஒரு பெரிய தலைவருக்கு இழுக்கை உண்டு பண்ண வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன்தான் மெரீனா கடற்கரை அவருக்கு மறுக்கப்பட்டது. இது மக்களிடம் அரசு மீதான கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

    இதனால்தான் அவரது இறுதிச்சடங்கின்போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது, என்றவரிடம் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தால் என்னவாகியிருக்கும் என்றதற்கு ட்ராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது என்ன நடந்ததோ அதேதான் அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் நடந்திருக்கும் என்றார். இப்போது இந்த இடத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் கட்டுவதற்கும் அரசுக்கு எந்தவித தடையும் இல்லை என்று கூறினார்.

    இது குறித்து திமுக செய்தித் துறை இணைச் செயலளார் பேராசிரியர் கான்ஸ்டைன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது அண்ணா சமாதி அருகே இடம் மறுக்கப்பட்டதற்கு தமிழக அரசு மட்டுமே காரணமல்ல. பாஜகவின், தமிழிசையும், குருமூர்த்தியும் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் இதற்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்றார்.

    தமிழக மக்களை பொறுத்த மட்டில் திராவிட இயக்கத் தலைவர்களாக அண்ணா அருகில் இருப்பவர்களை பார்த்து வருகிறார்கள். அதே வேளையில் காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் தலைவர்களை தேசியத்தலைவர்களாக பார்க்கிறார்கள் ஆகவேதான் அண்ணா சமாதி அருகே இடம் வேண்டும் என்று நாங்கள் கேட்டோம் என்கிறார் ரவீந்திரன்.

    இதில் எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்ய வேண்டும் என்று எண்ணினார் அதாவது திமுகவுக்கு எதிரான நிலையில் நான்தான் இருக்கிறேன் தினகரன் அல்ல என்று அவர் அதிமுக தொண்டர்களுக்கு உணர்த்த எண்ணினார். இதில் ஒரு மகிழ்வான செய்தி என்னவென்றால் தலைவர் கருணாநிதி அவர் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது 270 வது நாளில் பிறந்திருக்க வேண்டும் ஆனால் அவரோ சில பல நாட்கள் கழித்தே பிறந்தார் ஆக அவர் பிறக்கும்போதும் போராளியாக பிறந்தார் இறக்கும்போதும், இறந்தபிறகும் போராளியாகவே அண்ணாவை சென்று சேர்ந்துள்ளார். ஆக இவர்கள் செய்த செயலால் அவரின் புகழ் மேலும் மேலும் பெருகியுள்ளதே தவிர குறையவில்லை.

    தொடர்ந்து பேசியவர் இந்த செயல்பாடுகளை வெறுமனே அதிமுக, பழனிசாமி, என்று மட்டும் பார்க்க முடியாது மாறாக இது திராவிடத்திற்கு எதிரான போர் என்று அதிர வைக்கிறார் பேராசிரியர் கான்ஸ்டைன்டைன் ரவீந்திரன்.

    இது குறித்து கருத்து அறிய அதிமுக பிரமுகர்கள் சிலரை அணுகியபோது ஏற்கனவே எங்களது நிலைப்பாட்டை அறிவித்து விட்டோம். முன்னாள் முதலமைச்சர்களுக்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்ததாலேயே நாங்களும் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றனர் சொல்லி வைத்தது போல்.

    அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு இடம் தர மறுத்தது வெறுமனே வெறுப்பரசியலாக மட்டும் தெரியவில்லை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதுமானது பின்னர் அவர்களின் அடையாளங்கள் அத்தனையும் அழிந்து விடும் என்பார்கள். அதுபோல இப்போது தமிழினத்தின் அடையாளங்களில் ஒன்றாக, தமிழுக்காக, சமூக நீதிக்காக போராடிய ஒரு தலைவனுக்கு அவமரியாதை செய்யும் நோக்குடன் இறந்த பிறகும் இத்தகைய செயல்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

    எப்படி பெரியார் இப்போதும் காலங்கள் கடந்தும் தலைமுறைகள் கடந்தும் நினைக்கப்படுகிறாரோ போற்றப்படுகிறாரோ அதுபோல கருணாநிதியும் அவரின் சாதனைகளும் காலம் கடந்து போற்றப்படும்

    English summary
    The reasons why Edapadi Palaniswamy government denied Marina for Karunanidhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X