முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு நிதி ஒதுக்குவது ஒற்றுமையை குலைக்கும்: ராமதாஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு நிதி ஒதுக்குவது ஒற்றுமையை குலைக்கும் செயல் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் 2016-17 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி நேற்று தாக்கல் செய்திருக்கிறார். அந்த நிலை அறிக்கையின் இரண்டாவது பகுதியில் புதிய மற்றும் முக்கிய வளர்ச்சி நடவடிக்கைகள் என்ற தலைப்பில் 72-ஆவது அறிவிப்பாக முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட அணைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

The statement issued by pmk founder Ramadoss

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

கேரளத்தை ஆளும்கட்சிகள் அங்கு தேர்தல் வரும் போதெல்லாம் முல்லைப் பெரியாறு பிரச்சினையை எழுப்பி அதில் அரசியல் ஆதாயம் தேட முயலுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 8 ஆண்டுகளாகவே முல்லைப்பெரியாற்று அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததுடன், பேபி அணையில் பராமரிப்புப் பணிகளை முடித்தவுடன் நீர்மட்டத்தை முன்பிருந்தவாறு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

அதுமட்டுமின்றி, முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டிய தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவாக ஆணையிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அடிப்படையில் முல்லைப்பெரியாற்று சிக்கல் முடிந்து போன விஷயம்.

அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டம் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டு விட்டது. அடுத்தகட்டமாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான வாய்ப்புகளே இல்லை.

அவ்வாறு இருக்கும் போது, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்போவதாகவும், அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கேரள முதலமைச்சர் அறிவிப்பது அரசியல் லாபம் தேடும் செயல் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அதிலும் கேரளத்தில் உம்மன்சாண்டி தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்த 2 மாதங்களில் முடிவுக்கு வரவிருக்கிறது. இதனால் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தும் அதிகாரம் உம்மன்சாண்டி அரசுக்கு இல்லை. ஆனாலும், முல்லைப்பெரியாற்று புதிய அணைக்கு நிதி ஒதுக்குவதாக உம்மன்சாண்டி அறிவித்திருப்பதன் நோக்கம், கேரள மக்கள் மத்தியில் தமிழகத்திற்கு எதிரான பகைமை உணர்வை உருவாக்கி வாக்குகளைக் குவிப்பது தான்.

கேரள அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக தமிழக - கேரள மக்களிடையே பகைமை உணர்வை உருவாக்கி வருவதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும், அதை மதிக்காமல், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் எப்போதோ அளித்த சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை வைத்துக் கொண்டு, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை கடந்த இரு ஆண்டுகளில் 3 முறை கேரள அரசு நடத்தியிருக்கிறது.

2011-ஆம் ஆண்டின் இறுதியில் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலை கேரள அரசு எழுப்பியதால் மதுரை, தேனி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகவும் உருவெடுத்தது. அதேபோன்ற சூழலை இப்போதும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கேரள அரசின் நோக்கமாக இருக்குமோ? என்ற ஐயம் எழுகிறது.

கேரள அரசின் இந்த நோக்கம் நிறைவேறினால் இரு மாநில மக்களுக்கு இடையிலான ஒற்றுமையும், இந்திய ஒருமைப்பாடும் சீர்குலைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்து சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்று கேரள அரசை கண்டிக்க வேண்டும். தமிழக அரசும் இந்த விஷயத்தை அலட்சியமாக ஒதுக்கிவிடாமல் விழிப்புடன் இருந்து தமிழகத்தின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+