கேபிள் டிவிகாரர்கள் போல நடித்து துணிகர கொள்ளை - மாஜி வங்கி ஊழியருக்கு கத்திக் குத்து
பெரம்பூர்: சென்னை பெரம்பூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவரை கத்தியால் குத்தி அவரது வீட்டில் இருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் எஸ்.பி.ஐ காலனியை சேர்ந்தவர் வீலர். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி மரியாள். அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். நேற்று மாலை 4 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த வீலர் டி.வி பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது டி.வி சரியாக தெரியவில்லை. இதுகுறித்து அவர் கேபிள் டி.வி ஆபரேட்டரிடம் புகார் தெரிவித்தார். அவர் புகார் செய்த சிறிது நேரத்தில் டீலரின் வீட்டு கதவை 2 பேர் தட்டினார்கள். அப்போது வீட்டில் இருந்த வீலர் கதவை திறந்தபோது, அவரது வீட்டு கதவை தட்டிய 2 பேர் தாங்கள் உங்களது டி.வியை சரி செய்ய கேபிள் டி.வி. அலுவலகத்தில் இருந்து வந்ததாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை வீலர் வீட்டுக்குள் அனுமதித்தார். வீட்டுக்குள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் திடீரென அதிரடியாக செயல்பட்டு வீட்டு கதவை மூடிவிட்டு, வீலரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்து 5 பவுன் மதிப்பிலான 2 தங்க செயின்களையும், கையில் இருந்த 4 மோதிரங்களையும் பறிக்க முயன்றனர். இதை தடுக்க முயன்ற வீலரின் கையில் மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்திவிட்டு 9 பவுன் நகைகளை பறித்தனர்.
பின்னர் வீலரை அவரது வீட்டின் குளியல் அறையில் தள்ளிவிட்டு கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். குளியல் அறையில் அடைபட்டு இருந்ததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் வீலர் அங்கேயே மாலை வரை முடங்கி கிடந்தார்.
மாலை 5.30 மணி அளவில் பள்ளி முடிந்து வீலரின் மனைவி மரியாள் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, குளியல் அறையில் இருந்து முனகல் சத்தம் கேட்டது. உடனே அவர் குளியல் அறைக்கதவை திறந்து பார்த்தார். அங்கு அவரது கணவர் வீலர் கத்திக்குத்து காயங்களுடன் இருந்தார். பின்னர் அவரை மீட்டு பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து மரியாள் கொடுத்த புகாரின் பேரில் திரு.வி.க.நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகனாதன் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
