வழக்கறிஞர்களிலும் 30% போலி... சட்டத்துறை மதிப்பிழந்து வருவதாக இந்திய பார்கவுன்சில் தலைவர் வேதனை
சென்னை : இந்தியாவில் 30 % போலி வழக்கறிஞர்கள், போலி சட்ட சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இருப்பதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கூறியுள்ளார்.
சென்னையில் இந்திய பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மிஸ்ரா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது...

''போலி வழக்கறிஞர்கள் மற்றும் பயிற்சி பெறாத சட்டத்துறை பட்டதாரிகளால் வழக்கறிஞர் தொழிலே மதிப்பிழந்து வருகிறது. இந்தியாவில் 30 % போலி வழக்கறிஞர்கள் உள்ளனர்.
அதேபோல், வழக்கறிஞர் பயிற்சி பெற்றவர்களில் 20 % க்கும் மேலானவர்கள் போலி சான்றிதழ் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, போலி சான்றிதழ் வைத்திருந்த டெல்லி சட்ட அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தற்போது கண்டறியப்பட்டுள்ள போலிகளையும், பயிற்சி இல்லாதவர்களையும் வடிகட்ட முடிவு செய்துள்ளோம்.
அதேபோல், தமிழகம் மட்டுமின்றி பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம், நீதிமன்ற புறக்கணிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுபட்டு வருகின்றனர். இது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
அனைத்து வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சட்டத்துறையை முன்னேற்ற முடியாது. எனவே, அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்''
இவ்வாறு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கூறினார்.












Click it and Unblock the Notifications