தமிழகத்தில் சாதிச்சண்டைகள் இல்லை.. மதச்சண்டைகள் இல்லை..கலவரங்கள் இல்லை! காலரை தூக்கிவிட்ட ஸ்டாலின்!
சென்னை: காவல்துறையினரை எந்தவித குறுக்கீடும் இன்றி செயல்பட அனுமதித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் சாதிச்சண்டைகள் இல்லை.. மதச்சண்டைகள் இல்லை.. என மிக பெருமிதத்தோடு முதல்வர் ஸ்டாலின் கம்பீரமாக கூறினார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

''தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை. மதச்சண்டைகள் இல்லை. கூட்டு வன்முறைகள் இல்லை. கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை. காவல் நிலைய மரணங்கள் இல்லை. இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்று தான் என்னால் சொல்ல முடியும்.
இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான்... புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன.
அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. "அமைதியான மாநிலம் தமிழ்நாடு" என்ற நற்பெயர் வருகிறது.

ஒரு மாநிலம் வளருகிறது என்றால், அது அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள். சட்டம் ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது நமது அரசு. எந்தவிதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம்.
இதனால்தான் சமூகவிரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்.

மாநில காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை, தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வருவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சாதி, சமய வெறியர்கள், சமூக விரோதிகள் மீது அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications