இந்தியாவை உலுக்கிய அரசியல் மரணங்களும், விலகாத மர்மங்களும்... கொடநாடு வரை!
தமிழகத்தில், மர்மமான பல சம்பவங்களுக்கு விடையே கிடைக்கவில்லை என்பதுடன், திடீர் திடீரென்று மர்ம சாவுகளும் தொடர்கின்றன.
-பா. கிருஷ்ணன்
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். சீதை மீது சந்தேகம் எழுந்தவுடனே இராமபிரான் அவரைத் தீக்குளிக்கச் செய்தார்.
கணவன் கோவலன் அபாண்டமாக கொல்லப்பட்டதை கண்ணகி நிரூபித்ததும், சந்தேகம் கொண்டு தீர்ப்பளித்த ஒரே காரணத்துக்காகத் தனக்குத்தானே மரணதண்டனை கொடுத்துக் கொண்டான் பாண்டியன் நெடுஞ்செழியன்.
இந்த நிகழ்வுகள் யாவும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளன.

அரசு மீது நம்பிக்கையின்மை
ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில், பல நிகழ்வுகள் சந்தேகத்தை மேலும் மேலும் கிளறிவிடுகின்றன. ஒரு சம்பவம் மட்டும் என்றாலும் ஏதோ நேர்ந்துவிட்டது என்று தோன்றும். ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்து ஒரே மாதிரியான மர்ம சம்பவங்கள் நேர்ந்தால், அத்தகைய அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போய்விடும்.

மர்மங்களுக்கு விடை
நூற்றுக்கணக்கான கோப்புகளில் கையெழுத்துவிட்டதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி கூறியிருக்கிறார். திட்டங்கள் வேகமாக நடக்கின்றன என்றும் அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், மர்மமான பல சம்பவங்களுக்கு விடையே கிடைக்கவில்லை என்பதுடன், திடீர் திடீரென்று மர்ம சாவுகளும் தொடர்கின்றன.

ஜெ. மரணத்தில் மர்மம்
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தி வரும்நிலையில், ஜெயலலிதாவின் ஓய்வு இல்லமான கொடநாடு பங்களாவில் காவலாளி திடீரென்று கொல்லப்படுகிறார். அது தொடர்பாக போலீசார் தேடி வரும் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் இறக்கிறார். கொள்ளைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்ட சயான் என்பவர் குடும்பத்துடன் விபத்தில் சிக்குகிறார்.

கொடநாடு கொலையில் மர்மம்
இப்படி திகில் சம்பவங்கள் தொடர்பாக வேகமாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது கூட மர்மமாகவே இருக்கிறது. அரசியலும் மர்ம நிகழ்வுகளும் தொன்றுதொட்டு நடப்பதுதான் போலும். பலரது மரணங்கள் அப்படி இருப்பது ஜனநாயகத்தை ஒரு சிலர் தங்களது கைப்பாவையாகக் கொண்டு, குற்றச் செயல்களுக்குத் துணை போகிறார்களோ என்ற கவலையை அதிகரித்து வருகிறது.

டெல்லியில் தொடங்கியது
1971ம் ஆண்டு மே மாதம் 24 ம் தேதி டெல்லியில் நடந்த சம்பவத்தில் இன்னும் மர்மம் விலகிவில்லை. நாடாளுமன்ற சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை காசாளர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "பிரதமர் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம். வங்கதேச அறக்கட்டளை நிறுவனத்துக்காக ரூ. 60 லட்சம் பணத்தை அளிக்கும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார்" என்று யாரோ கூறியிருக்கிறார்கள். காசாளருக்கு லேசாக சந்தேகம் வந்ததும், "இது பிரமதரே பேசுகிறார்.." என்று மறுமுனையில் இருந்தவர் கூற, சில விநாடிகளில், அப்போதைய பிரதமரின் குரலைக் காசாளர் கேட்டார்.

பணம் பெற்றது யார்
அடுத்த கணம், அலறிப் புடைத்துக் கொண்டு ரூ. 60 லட்சத்தைத் தயார் செய்து பிரதமர் அலுவலகத்துக்கு விரைந்தார். அப்போதுதான் அது போலி அழைப்பு எனத் தெரியவந்தது. இத்தகவல் நாடு முழுவதும் செய்தியாளர்களுக்குத் தீயைப் போலப் பரவிவிட்டது. அதையடுத்து புலன் விசாரணை முடுக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ரூ. 60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக, ருஸ்தும் சோரப் நகர்வாலா என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஏதோ கடனுதவி பெற அணுகினார். ஆனால், அவரது விண்ணப்பத்தை ஏற்காத வங்கி கடன் வழங்கவில்லை. அதனால், அவர் ஒரு பொதுத் தொலைபேசி நிலையத்திலிருந்து வங்கியின் மேலாளரை மோசடியாக அழைத்துப் பணம் பெற முயன்றார் என்று கூறப்பட்டது.

பிரதமர் மீது குற்றச்சாட்டு
இது அரசியல் பிரச்சினையாக வெடித்தது. காரணம், பிரதமரின் பெயரைச் சொல்லி யார் வேண்டுமானாலும், அரசு வங்கியிலிருந்து பணம் எடுக்கலாம் என்ற அளவுக்கு நடைமுறை ஆனது குறித்து காரசாரமாக கேள்விகள் எழுந்தன. அத்துடன், பிரதமரே இதுபோல் அரசு வங்கியிலிருந்து இதற்கு முன் எத்தனை முறை பணம் எடுத்தாரோ என்றெல்லாம் சர்ச்சை கிளம்பியது.

மர்ம மரணங்கள்
இது தொடர்பாகப் புலன் விசாரணை நடத்திய டி.கே. காஷ்யப் என்ற அதிகாரி சாலை விபத்தில் இறந்தார். கைது செய்யப்பட்ட நகர்வாலா சிறையில் உயிரிழந்தார். நகர்வாலா, காஷ்யப் ஆகியோரது மரணங்கள் குறித்து சர்ச்சைகள் பல எழுந்தன. பின்னர் ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும், இச்சம்பவம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இவ்வளவு ஓட்டைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைவதாக இது குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தலைவர் நீதிபதி பி. ஜெக்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.

இந்திரா காந்தி வலதுகரம்
இந்திரா காந்திக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கூறப்படும் துறவி தீரேந்திர பிரம்மச்சாரி. இவர் இந்திரா காந்திக்கு யோகாசனம் கற்றுத் தந்தவர். யோகாசனம், ஆன்மிகம் ஆகியவற்றில் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டிய பிரம்மச்சாரி உலகின் பல நாடுகளில் பயணம் செய்தவர். அதே சமயம் சிவா துப்பாக்கித் தொழிற்சாலை என்ற ஆயுத உற்பத்தி ஆலையின் பங்குதாரராக இருந்தார். இது நாடு முழுவதும் பெரிய பிரச்சினையைக் கிளறியது. அது மட்டுமின்றி இதுபோல் அவரது பெயரில் இருந்த பல சொத்துகள் சட்ட விரோதமானவை என்றும் கண்டறியப்பட்டது. ரஷியாவில் ரஸ்புடீன் என்ற துறவியைப் போல இவரும் சித்திரிக்கப்பட்டார். ஆனால், இவர் ஜம்மு பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்த தனியார் விமானம் விபத்தில் சிக்கியதால், மர்மான முறையில் இறந்தார்.

காண்ட்ராக்டர் ரமேஷ்
தமிழகத்தை உலுக்கிய ஒரு மரணம் அண்ணாநகர் ரமேஷ் என்ற கட்டட காண்ட்ராக்டர் தனது குடும்பத்தினருடன் விஷமருந்தி இறந்தது. இச்சம்பவம் 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு. ரமேஷ் குடும்பத்தினரின் சாவுக்கு போலீசார் சித்திரவதையே காரணம் என்று திமுகவினர் கடுமையாகச் சாடினர். ஆனால், அது தற்கொலை அல்ல, கொலை என்று ஜெயலலிதா சட்டப் பேரவையிலேயே கூறினார். ரமேஷின் மரணத்தின் பின்னணியில் திமுகவினர் நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று கூறினர்.

ஸ்டாலினுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு
ரமேஷ் அப்போது மேயராக இருந்த மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். சென்னையில் மேம்பாலங்களைக் கட்டியதில் பல கோடி நஷ்டம் மாநகராட்சிக்கு ஏற்பட மு.க. ஸ்டாலின் காரணமாக இருந்தார் என்று ஜெயலலிதா அரசு குற்றம் சாட்டியது. இதனிடையில் டிஜி தெய்வசிகாமணி என்ற காண்ட்ராக்டர் தனக்கு அரசு காண்ட்ராக்ட் கிடைப்பதற்காக ரமேஷ் மூலமாக மேயர் மு.க. ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா. கிருட்டிணன் ஆகியோருக்கு ரூ. 7 கோடி கமிஷன் கொடுத்ததாக போலீசில் புகார் கொடுத்தார். அதையடுத்து, ரமேஷ் கைது செய்யப்படலாம் என்று பேசப்பட்டது.

குடும்பத்தோடு தற்கொலை
இச்சம்பவத்தை அடுத்து, 2001ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ரமேஷ், அவரது மனைவி காஞ்சனா, மூன்று மகள்கள் விஷமருந்தி இறந்து கிடந்தனர். அவரது தற்கொலைக் குறிப்பில், தான் குற்றமில்லாதவன் என்றும், போலீசார் நெருக்கடி கொடுத்து வருவதாகும் புகார் கூறியிருந்தார். சமூகத்தில் தனக்கிருக்கும் பெயருக்கு களங்கம் ஏற்படுமே என்ற கவலையிலும், போலீசார் சித்திரவதை செய்வதாலும் உயிரை மாய்த்துக் கொள்வதாக அவரது தற்கொலைக் கடிதத்தில் கூறப்பட்டது. அக்கடிதத்தை அவரே எழுதினாரா என்பது தெரியவில்லை. ரமேஷ் தற்கொலை செய்துகொண்டாரா, அவரது மரணத்தில் ஏதாவது மர்மம் இருக்கிறதா, அரசு காண்ட்ராக்ட் தொடர்பாக அவர் மூலமாகப் பணம் கொடுத்தாக தெய்வசிகாமணி கூறியதன் பின்னணி என்ன என்ற மர்மங்கள் இன்னும் விலகவில்லை.

சாதிக் பாஷா
நாட்டையே உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பெரிய மர்மம் இன்றும் விடுபடவில்லை. அதுதான் சாதிக் பாஷா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மரணம். அவரும் தற்கொலை செய்துகொண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதிக் பாஷா 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நண்பர் ஆவார். சாதிக் பாட்சா கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திவந்தார். ஆ. ராசாவின் சகோதரர் கலியபெருமாள் என்பவர் கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். ராசா மத்தியில் அமைச்சர் ஆனதை அடுத்து, இவரது தொழில் வேகமாக அபிவிருத்தி அடைந்தது.

நீடிக்கும் மர்மம்
2 ஜி வழக்கை விசாரித்து வரும் புலன்விசாரணை அதிகாரிகளுக்கு சாதிக் பாட்சா மீதும் கண் இருந்தது என்று கூறப்படுவதுண்டு. 2ஜி மூலம் கிடைத்த பணத்தை ஆ. ராசா கிரீன் ஹவுஸ் நிறுவனத்தில் போட்டு வைத்திருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு. இந்நிலையில், 2011ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி சாதிக் பாட்சா தனது இல்லத்தில் தூக்கிலிட்டு இறந்து கிடந்தார். அத்துடன், 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகவும் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குதாரராக கிரின்ஹவுஸ் புரமோட்டர் நிறுவனம் இடம்பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் சாதிக் பாட்சாவின் மரணம் பல மர்மங்களுக்கு மடிச்சு போட்டிருக்கிறது. இவரது மரணம் தற்கொலையா இல்லையா என்பது இன்று வரையில் தெரியவில்லை,.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications