வள்ளலார் சர்வதேச மையத்திற்கு அடிக்கல்? சட்டென குவிந்த பக்தர்கள்.. போலீஸ் ரவுண்டப் செய்ததால் பதற்றம்
வடலூர்: வடலூர் சத்திய ஞானசபை பெருவளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். எனவே காவல்துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பெருவெளி: கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த பார்வதிபுரம் என்ற இடத்தில் 1887&ஆம் ஆண்டில் சத்திய ஞான சபையை அமைத்தார் வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். அதற்காக பார்வதிபுரம் மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாக பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரை பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாக பயன்படுத்தினார்.

அங்குள்ள ஒளிக்கோயிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கி காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றி பார்க்க வேண்டும் என்பது தான் 70 ஏக்கரில் பெருவெளி அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
என்ன பிரச்னை?: ஆனால், வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, முதலமைச்சர் இன்று கானொளி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் என பாமக கட்சியும், அப்பகுதி மக்களும் கூறியுள்ளனர். ஒளிக்கோயிலின் தீப ஒளியை பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கத் துடிப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் எதிரானது என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்ப்பு ஏன்?: "வடலூர் சத்தியஞான சபையில் பெருவெளி அமைக்கப்பட்டு 157 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்தில் அங்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெருவெளி அமைக்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகள் வள்ளலார் உயிருடன் வாழ்ந்தார். அப்போது பெருவெளியில் கட்டிடங்களைக் கட்டலாம் என்றும், வேளாண்மை செய்யலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்க வள்ளலார் மறுத்து விட்டார்.
காரணம்: அதற்காக அவர் கூறிய காரணம், இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்; அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். இப்படி இருக்கையில் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பது சரியல்ல" என்று பாமகவினரும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர்.
மாற்று யோசனை: பெருவெளியை தவிர்த்து, சத்திய ஞானசபையிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வள்ளலார் பிறந்த மருதூர், அவர் தங்கியிருந்து நிர்வாகம் செய்த கருங்குழி, அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம் ஆகியவை உள்ளன. அப்பகுதிகளில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் மாற்று யோசனையை கூறியுள்ளனர்.
இது தவிர சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரி சுரங்கம் இருந்து மூடப்பட்ட நிலம், கடலூர் சாலை. கும்பகோணம் சாலை, சேத்தியாத் தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் சர்வதேச மையத்தை அமைக்கலாம் என்றும், அதுவரை அடிக்கல் நாட்டுவதை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் கூறி சத்திய ஞானசபை பெருவளியில் மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். எனவே காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications