'அசிங்கமா இருக்கு'.. திண்டிவனம் திமுக கவுன்சிலர்கள் 13 பேர் ராஜினாமா.. அமைச்சர் மருமகன் மீது புகார்
திண்டிவனம்: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட எங்களால் நிறைவேற்ற முடியாத நிலை திண்டிவனம் நகராட்சியில் இருக்கிறது.. எனவே இங்கு நாங்கள் கவுன்சிலராக இருப்பதை விட ராஜினாமா செய்வதே சரியாக இருக்கும் என்று கூறி 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறும் நகராட்சி என்றால் அது திண்டிவனம் நகராட்சி தான். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திண்டிவனம் நகராட்சி மொத்தமாக 33 வார்டுகளை கொண்டது. இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், 23 இடங்களை கைப்பற்றியதன் மூலம் நகராட்சியை கைப்பற்றியது.திமுகவைச் சேர்ந்த 9-வது வார்டு கவுன்சிலரான நிர்மலா திண்டிவனம் நகராட்சி தலைவராக உள்ளார். வி.சி.க-வை சேர்ந்த ராஜலட்சுமி துணை தலைவராக உள்ளார். நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் 8-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இந்நிலையில் திண்டிவனம் நகராட்சியில் சேர்மன் நிர்மலா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக அதிருப்தியில் 13 திமுக கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படுவதில்லை என்று குமுறி வந்த திமுக கவுன்சிலர்கள், இந்த நகராட்சி தலைவர் சுதந்திரமாக செயல்படவில்லை. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. பொதுமக்களுக்கு எந்த நலத்திட்டமும் செய்ய முடியவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் கவுன்சிலராகி ஒன்றரை வருடங்களில் பல மக்கள் பிரச்னைகளை எழுப்பி உள்ளோம். ஆனால் எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை. எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரவில்லை. அதனால் எங்கள் பகுதி மக்களை சந்திக்க முடியவில்லை. ஒரே அசிங்கமாக உள்ளது என்று 13 திமுக கவுன்சிலர்கள் தங்கள் குமுறலை கடந்த திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக 13 கவுன்சிலர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி அதனை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது: நகர்மன்ற தலைவர் செயல்படாத நிலையில் உள்ளார். இதனால் நகர்மன்றம் செயல்படாமல் உள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவே இல்லை. நகர் மன்றத்திலும் வார்டு மக்களின் தேவைகளை பேச இயலாத நிலை.. பேசினால் அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் மிரட்டும் நிலை ஏற்படுகிறது. வார்டில் மக்களை சந்திக்கவே இயலவில்லை. மக்களை சந்திக்கவே அச்சமாக உள்ளது. மக்கள் கேட்கும் போது அவமானம் மற்றும் மனஉளைச்சலாக உள்ளது.
அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வானின் கட்டுப்பாட்டில் திண்டிவனம் நகர்மன்றம் உள்ளது. இவர்களே அனைத்து டெண்டர்களையும் முடிவு செய்கின்றனர். கையொப்பம் இட்டு மன்றத்தில் நிறைவேற்றுவது மட்டுமே எங்கள் பணி. நாங்கள் மன்றத்தில் மக்கள் தேவைகளை பேசினால் ரிஸ்வான் நேரிலேயோ தொலைப்பேசியிலோ மிரட்டுகிறார். அமைச்சரின் ஆலோசனையின் படி நாங்கள் தேர்தலின் போது அதிக பணம் செலவு செய்து கடனாளியாகி உள்ளோம்.
நகர்மன்ற தலைவர் செயல்பாடு இல்லாததால் மன்றம் முடங்கி உள்ளது. மக்கள் தேவைகளை நிறைவேறற் இயலாததால் மனம் நொந்து எங்களின் நகர் மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.
திண்டிவனம் நகராட்சியில் தொடர்ந்து டெண்டர் உட்பட பல்வேறு விவகாரங்களில் அமைச்சர் செந்தில் மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் தலையீடு அதிகமாக இருப்பதாக ஒரு பிரிவு திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் திண்டிவனம் கவுன்சிலர்களில் ஒரு தரப்பு அமைச்சர் பொன்முடியின் பக்கமும், மறு பிரிவினர் செஞ்சி மஸ்தான் பக்கம் நிற்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே திமுக நகராட்சி சேர்மன் நிர்மலாவின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரன் அதிருப்தி திமுக கவுன்சிலர்களின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். எந்த பாரபட்சமும் இல்லாமல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீதும் அவரது மருமகன் ரிஸ்வான் மீதும் சிலர் வீண் அவதூறு பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதே இல்லை என்றும் கவுன்சிலர் ரவிச்சந்திரன் கூறினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் விரைவில் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications