ராம்குமார் மரணம்: மருத்துவமனையில் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் விசாரணை... சிறையிலும் ஆய்வு
சென்னை : ராம்குமார் மரணம் தொடர்பாக திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி ராயப்பேட்டை மருத்துவமனை, புழல் சிறையில் விசாரணை மேற்கொண்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் 24-ம் தேதி சுவாதி என்பவர் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை வழக்கில் ஜூலை 1ம் தேதி நெல்லையில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார்.
சிறையில் மின்சார வயரை பல்லால் கடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பின் முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. ராம்குமார் நேற்று முழுவதும் அமைதியாகவே இருந்ததாகவும், காலையில் சாப்பிட்ட அவர், மதிய உணவுக்கு அனைவரும் சென்ற பின்னரும் ராம்குமார் செல்லவில்லை என்றும் சிறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

மாலை 4.45 மணிக்கு தண்ணீர் குடிக்கப் போனபோது அவர் மின்சார வயரை கடித்து மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசியல் தலைவர்கள் சிபிஐ விசாரணை கோரியுள்ளனர். சிலரோ நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ராம்குமார் உயிரிழந்தது தொடர்பாக குற்றவியல் நடைமுறைப் சட்டப் பிரிவு 176 (1) ஏவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவியல் நடுவர் புழல் சிறையிலும் விசாரணை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.
அதன்படி ராம்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை மருத்துவமனையில், திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தினார். சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த நீதிபதி தமிழ்ச்செல்வி, ராம்குமாரின் உடலை நேரில் பார்த்தார். பிறகு, மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.
பின்னர் புழல் சிறைக்குச் சென்ற நீதிபதி தமிழ்ச்செல்வி, ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த அறை, சமையற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அவர் மின்சாரம் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட இடத்தையும் தமிழ்ச்செல்வி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications