மதுரையில் கள்ளழகர்: விடிய விடிய நடந்த எதிர்சேவை
மதுரை: அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்பு கொடுத்தனர்.
வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிக்க திங்கட்கிழமை அழகர்மலையில் புறப்பட்ட அழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.

விடிய விடிய எதிர்சேவை
இன்று காலையில் மூன்று மாவடியில் எதிர்சேவை துவங்கியது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்களும், பக்தர்களும் குவிந்து கள்ளழகரை எதிர்சேவை செய்து வணங்கி வரவேற்றனர். மதுரைக்கு வந்த கள்ளழகரை இப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

பக்தர்கள் வெள்ளத்தில்
தொடர்ந்து புதூரில் எதிர்சேவை நடைபெறுகிறது. இன்று மாலை மாநகராட்சி அலுவலகம் அருகே கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறஉள்ளது. தொடர்ந்து தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

ஆண்டாள் சூடிய மாலை
திருவிழாவையொட்டி கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் போது சூடிக்கொள்ளும் ஆண்டாள் சூடிய மாலை, கிளி, வஸ்திரம் ஆகியன ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு வந்துள்ளது.

திருப்பதி, ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாளுக்கு ஆண்டாள் சூடிக்களைந்த மாலை தினம் சாற்றப்பட்டு வருகிறது. அதே போல் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவின் 5ம் நாளன்று கருட சேவையன்று ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாற்றுவது வழக்கம். ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜ பெருமாளுக்கு சித்திரை தேரோட்டத்தின் போதும் ஆண்டாள் சூடிக்களைந்த கிளி, வஸ்திரம் போன்றவைகள் சார்த்தபடுகிறது.

கள்ளழகருக்கு மாலை
அது போல் ஆண்டு தோறும் மதுரை அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்துடன் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி , வஸ்திரத்தை சூடி வைகையற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதே போல் இந்தாண்டு சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் நிகழ்ச்சியில் சாற்றப்படும் மாலை, கிளி, வஸ்திரம் ஆகியன ஆண்டாளுக்கு மாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஊர்வலமாக வந்த மாலை
பின் மாட வீதி , கந்தாடை வீதி வழியாக ஆண்டாள் சூடிய மாலை சுற்றி வரப்பட்டது. பின் அவற்றை ஸ்தானிகர் ரமேஷ் தலைமையில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சுந்தரராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து பின் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, வஸ்திரங்கள் சார்த்தப்படும். பின் அவற்றுடன் சுந்தரராஜ பெருமாள் நாளை காலை 6 மணிக்கு வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மதுரையில் உள்ளூர் விடுமுறை
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி மதுரை மாவட்டத்துக்கு புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அளிகப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வைகையில் மே 24-தேதி பணி நாள் ஆக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
