மூதாட்டியை கொன்ற 3 வாலிபர்களுக்கு தலா மூன்று ஆயுள், ரூ.15,000 அபராதம்
ஈரோடு: ஈரோட்டில் மூதாட்டியை குத்திக் கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்த 3 வாலிபர்களுக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொச்சிகாட்டுவலசை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி வள்ளியம்மாள்(65). கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி வள்ளியம்மாள் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது லக்காபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளிகளான மணி (19), வேலு (20), கோவிந்தராஜ் (21) ஆகியோர் வீடு புகுந்து அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க வளையலை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி திருநாவுக்கரசு முன்பு நேற்று நடந்தது.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது, அத்துமீறி வீட்டிற்குள் புகுந்ததற்காக மூவருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை செய்ததற்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், நகையை கொள்ளையடித்ததற்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
தண்டனையை மூவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராத தொகையை செலுத்தாத பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications