தமிழ்நாட்டுக்கு இதெல்லாம் ரொம்ப புதுசுங்க.. வளைத்து வளைத்து பேட்டி தரும் (முதல்) முதல்வர்!
தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வளைத்து வளைத்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சென்னை: இது தமிழ்நாடுதானா, இவர் முதல்வர்தானா என்றெல்லாம் மக்கள் வாய் பிளந்து போய் உட்கார்ந்துள்ளனர். காரணம் நடக்கும் நிகழ்வுகள் இப்பபடி. தமிழக வரலாற்றிலேயே இதுவரை இப்படி ஒரு முதல்வரை நாம் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு மீடியா இழுக்கிற இழுப்புக்கெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
இதுவரை எந்த ஒரு தமிழக முதல்வரும் இந்த அளவுக்கு வளைத்து வளைத்து மீடியாக்களுக்குப் பேட்டி அளித்ததாக நினைவில்லை. எத்தனை பேட்டிகள்.. சற்றும் சோர்வில்லாமல் பேட்டி தந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். எந்த சானலைப் பார்த்தாலும் முதல்வரின் பிரத்யேகப் பேட்டிகள்தான்.
தமிழக வரலாற்றில் இதெல்லாம் சில மாதங்களுக்கு முன்பு வரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய அரிய விஷயம். முதல்வரிடம் பேட்டியா.. அடேங்கப்பா.. பெரிய ஆளுய்யா நீ என்றுதான் சக பத்திரிகையாளர்களே ஆச்சரியப்படுவார்கள். அப்படித்தான் இருந்தது தமிழ்நாடு. ஆனால் ஓ.பி.எஸ். தலைகீழாக மாறி நிற்கிறார்.. இவர் வேற மாதிரி என்று சொல்ல வைத்து விட்டார்.

ஜெ. வுக்கு முன்பு.. ஜெ.வுக்குப் பின்பு
ஜெயலலிதா மறைவுக்கு முன்பு இருந்த ஓ.பி.எஸ். வேறு.. அவரது மறைவுக்குப் பிறகு உள்ள ஓ.பி.எஸ். வேறாக இருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம், பத்திரிகையாளர்களைச் சந்திக்க சற்றும் தயங்குவதில்லை. ஓ.பி.எஸ். சத்தமாக பேசி யாரும் பார்த்ததில்லை. அவர் வகிக்கும் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் அவ்வளவு மென்மையாக பேசுவாராம். சத்தம் போட்டு அவரை யாருமே பார்த்ததே இல்லையாம்.

பேசாத நிமிடம் இல்லை
தவறைச் சுட்டிக் காட்டும்போது கூட மென்மையாக சொல்லி எடுத்துரைப்பாராம். அப்படித்தான் இத்தனை காலமாக அவரை வைத்திருந்தார் மறைந்த ஜெயலலிதா. ஆனால் தற்போது ஓ.பி.எஸ். பேசாத நிமிடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு செம பிசியாக இருக்கிறார். நேற்று முதல் அத்தனை பிரஸ் மீட், அத்தனை பேட்டிகள்.. மனிதர் சற்றும் சளைக்கவே இல்லை.

வளைத்து வளைத்துப் பேட்டி
அந்த டிவி, இந்த டிவி என்று வளைத்து வளைத்துப் பேட்டி கொடுத்து வருகிறார். நேற்று இரவு முழுவதும் முதல்வர் தூங்கவே இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் காலையில் லேசான ஒரு மருத்துவ செக்கப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டு தொடர்ந்து சுறுசுறுப்பாக தலைவர்களை, தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.

நேற்று இரவு முதல்
நேற்று இரவு முதல் பல்வேறு தொலைக்காட்சி சானல்களின் செய்தியாளர்கள் தொடர்ந்து அவரது இல்லத்தை முகாமிட்டுள்ளனர். அடுத்தடுத்து பேட்டி கேட்டு வருகின்றனர். முதல்வரும் நேரம் ஒதுக்கி அனைவருக்கும் பேட்டி கொடுத்து வருகிறாராம்.

கருணாநிதியைத் தவிர
தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்களில் அந்தக் காலத்துத் தலைவர்கள் இயல்பாக மீடியாக்களிடம் பழகியுள்ளனர். அண்ணாவுக்குப் பிறகு வந்த தலைவர்களில் கருணாநிதி மட்டுமே அதிக அளவில் மீடியாக்களுடன் உரையாடக் கூடியவர். ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் ஓ.பி.எஸ். புதிய வரலாறுதான் படைத்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications