திருப்பரங்குன்றம் தீப வழக்கு.. இல்லாத பிரச்சனையை உருவாக்கிய திமுக? இந்து விரோத போக்கா?
மதுரை : திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக மோதல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்துக்கள் பின்பற்ற போராடி வரும் ஒரு புனித நிகழ்வு, தற்போது சட்ட, நிர்வாக மற்றும் அரசியல் சவால்களுக்குள் சிக்கியுள்ளது. இது தி.மு.க.வின் திட்டமிட்ட அரசியல் மோதல் மற்றும் பண்டைய இந்து மரபுகளைக் கீழ்மைப்படுத்தும் முயற்சி என்று இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும் விமர்சகர்களும் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை - தமிழர் பண்பாடு
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு பெரும் உதாரணம்தான் திருப்பரங்குன்றம் மலை. மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை, தமிழ்ப் பண்பாட்டில் ஆழ்ந்த வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கார்த்திகை தீபத் திருவிழாவை பக்திப் பெருக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

மலையில் தீபம் ஏற்றும் இந்த பாரம்பரியம், வெறும் சடங்கு மட்டுமல்ல, தமிழ் இந்து கலாச்சார அடையாளத்தின் ஓர் அங்கமாகப் பார்க்கப்படுகிறது. முன்பு இங்கே விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் ஆங்கிலேயே காலத்தில் கைவிடப்பட்டதாக இந்து அமைப்பினர் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, அந்த நம்பிக்கை மதிக்கப்படவும், தொடர்ந்து பாதுகாக்கப்படவும் வேண்டும் என்று பலர் வாதிட்டு வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேரடியாக தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது இது தொடர்பாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளியிட்ட உத்தரவில், தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், அங்கு தீபம் ஏற்றுவது தர்காவையோ முஸ்லிம் சமூகத்தையோ எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறி, அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகளை நீதிபதி நிராகரித்தார்.
கோயில் நிர்வாகம், மலையில் உள்ள காலிப்பகுதிகளின் மீது தனது உரிமையைப் பாதுகாப்பதில் தவறிவிட்டது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 1923 ஆம் ஆண்டின் தீர்ப்பு யார், எதற்கு உரிமையாளர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அது மசூதி நிர்வாகிகளை கோவில் பகுதியை ஆக்கிரமிப்பதில் இருந்து தடுக்கவில்லை. எனவே, அதன் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க கோயில் நிர்வாகம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம், அங்கே தீபம் ஏற்றுவதில் தவறு இல்லை" என்று நீதிபதி கூறினார்.
ஆனால் சட்ட உத்தரவை மதிக்காத திமுக அரசு , நீதிமன்ற அவமதிப்பை செய்து.. அங்கே விளக்கு ஏற்றாமல் தவிர்த்து உள்ளது. கோர்ட் சொன்னபடி அங்கே விளக்கு ஏற்றி இருந்தால் பிரச்சனையே இருக்காது.
திமுக அரசு உருவாக்கிய பிரச்சனை
திமுக அரசு, இந்துக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து, மதச்சார்பற்ற தோற்றத்தை உருவாக்க, இல்லாத ஒரு பிரச்சனையை உருவாக்கியதாக விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர்.
பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் வழிபட நினைக்கும் அந்த இடத்திற்கான பிரத்தியேக உரிமை குறித்து மாநில அரசு கேள்வி எழுப்புவது திமுகவின் இந்து விரோத போக்கை காட்டுகிறது. இது உரிமை மற்றும் மரபுகள் குறித்த தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, முன்னர் இல்லாத பதற்றத்தை விதைத்தது. மதங்களுடையே நல்லிணக்கத்தைக் காப்பதற்குப் பதிலாக.. இந்துக்கள் மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக திமுக அரசு காட்ட முயல்கிறது. இது வெளிப்படையான அரசியல் ஆதாயத்திற்கான சிறுபான்மைத் திருப்தி நடவடிக்கையாகப் பலரால் பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்தபோது, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. இதற்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது, நிர்வாக மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை இதற்குக் காரணமாகக் காட்டியது.
நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னரும், அரசின் மேல்முறையீட்டைக் காரணம் காட்டி, பக்தர்களை சடங்கை நிறைவேற்ற விடாமல் காவல்துறை மற்றும் அதிகாரிகள் தடுத்தனர். இந்து பக்தர்கள் இதைத் தங்கள் மத நடைமுறைகளில் நேரடித் தலையீடு என்றும், இந்து மத நம்பிக்கைகளுக்கு தி.மு.க. அவமதிப்பு காட்டுவதாகவும் வலுவாகக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்து மத நடைமுறைகளில் நேரடித் தலையீடு
தீபத்திற்குச் சாதகமான உத்தரவை வழங்கிய நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக தி.மு.க.வுடன் தொடர்புடைய தலைவர்கள் பதவிநீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றபோது இந்த விவகாரம் ஒரு தீவிரமான திருப்பத்தை அடைந்தது. நீதித்துறையை அச்சுறுத்தும் மற்றும் அதன் சுதந்திரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சி என்று இது பரவலாக விமர்சிக்கப்பட்டது.
மதரீதியான சர்ச்சையின் காரணமாக நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் வாதிடுகின்றனர். சட்டபூர்வமான உத்தரவுக்காக ஒரு நீதிபதியை நீக்க முயற்சிப்பது, நீதித்துறையை அரசியலாக்குவது மற்றும் அதன் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வது தவறான அரசியல் என்று அரசியல் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
திமுகவின் இந்து விரோதக் கொள்கை
இந்த சர்ச்சை, திமுகவின் இந்து விரோதக் கொள்கைகளின் தொடர்ச்சியான ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளால் பார்க்கப்படுகிறது. மற்ற மதங்களின் திருவிழாக்களுக்கும் நடைமுறைகளுக்கும் அரசு சலுகைகளும் ஆதரவும் அளிக்கும்போது, பண்டைய இந்து சடங்குகளான தீபம் போன்றவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக இந்து அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
பாரபட்சமான நிர்வாகச் செயல்பாடுகள், சட்டத்தை தேர்ந்தெடுத்து அமல்படுத்துவது, மற்றும் தேவையற்ற சட்டத் தடைகள் ஆகியவை தி.மு.க. நடுநிலையாக இல்லாமல், இந்து மரபுகளைத் திட்டமிட்டு குறிவைக்கிறது என்பதற்கு ஆதாரமாக விளக்குகின்றன. பலருக்கு, இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, மாறாக மாநிலத்தில் இந்து கலாச்சார அடையாளத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன












Click it and Unblock the Notifications