ஜோலார்பேட்டையில் அண்ணாமலை "கால்" வெச்சதுமே திமுக.. ஓஹோ, அது சோலையார்பேட்டையா? திருதிரு திருப்பத்தூர்
திருப்பத்தூர்: ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம் இந்த நான்கும்தான் திமுக அரசின் நான்கு கால்கள்... தேசிய தலைவர்கள் எல்லாரையுமே ஜாதி தலைவர்களாக மாற்றியதும் திமுகதான்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள் நடைபயணம்" பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டந்தோறும், சாலையின் வழியெங்கும் அண்ணாமலைக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.. ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

இந்த யாத்திரை, வெறுமனே, ஒரு நடைபயணமாக முடிந்துவிடாமல், செல்லும் இடங்களிலெல்லாம் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார் அண்ணாமலை.
ஆலயங்கள்: அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் திட்டங்களையும், அந்த திட்டங்களினால் கிடைத்த பலன்களையும், மக்களிடம் நேரடியாகவே சொல்லி வருவதுடன், திமுக அரசின் குறைகளையும் மறக்காமல், லிஸ்ட் போட்டு சொல்லியும் வருகிறார். அந்தவகையில், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்..
அப்போது, கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "வேடியப்ப சுவாமி, வீர ஆஞ்சநேயர், எல்லோரையும் காக்கும் காட்டேரி அம்மன் என ஆலயங்கள் நிறைந்திருக்கும் ஆன்மீக மண். இந்த ஜோலார்பேட்டை பக்கத்தில் அச்சமங்கலம் கிராமம் உள்ளது.. அங்கே 3,000 வருடத்துக்கு முன்பு, முந்தைய கற்காலக் கருவிகள் கிடைத்த, தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்று.
சோலார்பேட்டை: 2019ல் சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்தபோது, சென்னைவாசிகள் தாகத்தில் தவித்தபோது, 400 மில்லியன் லிட்டர் தண்ணீர், ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்த பெரிய மனதிற்கு சொந்தக்காரர்கள் இந்த ஜோலார்பேட்டை மக்கள். ஒரு காலத்தில் சோலைகள் நிறைந்திருந்ததால்தான், இது "சோலையார்பேட்டை" என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு ஜோலார்பேட்டை ஆனது. இன்று சோலைகளும் இல்லை, மக்களுக்கான வேலைவாய்ப்புகளும் இல்லை.
தமிழக அரசின் தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் கொள்கைக் குறிப்பு வெளியிடுவது வழக்கம். கடந்த 2022-23ஆம் ஆண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,581 ஏக்கரில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்க திட்டம் உள்ளதாக சொன்னார்கள்.. ஆனால், இந்த இந்த வருட கொள்கை குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பெயரையே காணோம்..
திருப்பத்தூர்: கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இவற்றை உறுதி செய்வது மட்டும் தான் ஒரு அரசின் தலையாய கடமை. தமிழக அரசின் கொள்கை குறிப்பு, திருப்பத்தூர் மாவட்டத்தையே ஒதுக்கி வைத்து, இந்த மாவட்ட மக்களுக்கு அநீதி செய்திருக்கிறது. ஆனால், நம்முடைய பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அமிர்த பாரத் திட்டத்தின் கீழ், ரூபாய் 16 கோடி நிதியில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துகிறது.
26,885 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக வீடு, 1,51,750 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,38,999 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 65,630 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 98,121 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 53,652 விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை ரூ.30,000, இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 478 கோடி ரூபாய் என இப்பகுதியின் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.
4 கால்கள்: ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம் இந்த நான்கும்தான் திமுக அரசின் நான்கு கால்கள். தமிழகத்தில் இதனை அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பதும் திமுகதான். தேசிய தலைவர்கள் எல்லாரையுமே ஜாதி தலைவர்களாக மாற்றியதும் திமுகதான்.
தமிழகம் முழுவதும் ஜாதியின் பெயரால் மக்களைப் பிரித்து, அதன் மூலம் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறதும் திமுகதான். ஜாதியை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து, இன்று தேர்தலுக்கு முன்பாக ஜாதிக்கலவரத்தை உருவாக்கி வாக்கு வாங்குவதும் திமுகதான்.
வேலைவாய்ப்பு: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது. தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ திமுகவில் வாய்ப்பு இல்லை. திமுகவில் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் முன்னேற முடியும். தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களில், திமுகவினர் வாங்கிய பொருளுக்குப் பணம் தர மறுப்பதும், கடை உரிமையாளர்களைத் தாக்குவதும் தொடர்கதை.
11 திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் ஜெயிலிலும், ஒரு அமைச்சர் பெயிலிலும் இருக்கிறார்கள்.. இன்னும் 5 அமைச்சர்கள் மீது, பாஜக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
புறக்கணிப்போம்: வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக கூட்டணியை முழுவதுமாக புறக்கணித்து, நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications