நா ரெடி.. நீங்க ரெடியா.. தமிழில் பேசி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய டெரிக் ஓ பிரையன்
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் பெரும்பாலும் தமிழிலேயே பேசி அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் பெரும்பாலும் தமிழிலேயே பேசி அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவேந்தல் கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் தேசிய தலைவர்கள் பலர் கலந்துகொண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதில் பங்கேற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் பெரும்பாலும் தமிழிலேயே பேசி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஆசைப்படுகிறேன்
அவர் பேசியதாவது, ஒவ்வொரு திமுக தொண்டரையும் வணங்குகிறேன். உங்களைப் போன்ற தொண்டர்களைக் கொண்டுதான் மமதா பானர்ஜி கட்சி தொடங்கினார்.
நான் இன்றைக்கு ஆங்கிலத்திலோ பெங்காலி மொழியிலேயோ இந்தி மொழியிலோ பேசலாம். ஆனால் இன்று தமிழ் மொழியில் பேச ஆசைப்படுகிறேன்.

மேற்குவங்க மக்கள் சார்பாக
என் தமிழ் பேச்சில் வேறு ஏதாவது தவறு இருந்தால் நிச்சயம் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள். திரிணாமூல் காங்கிரஸ், அதன் தலைவர் மமதா பானர்ஜி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலைஞரை நேசிக்கும் பல லட்சம் மேற்கு வங்க மக்களின் சார்பாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

40 தொகுதிகளையும்
கூட்டாட்சி தத்துவத்தை மதித்த மாபெரும் தலைவரை பேசுவதற்கு பற்றி புதிதாக பேச ஒன்றும் இல்லை. கூட்டாட்சி தத்துவத்தின் மன்னன் கருணாநிதி. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதுதான் கருணாநிதிக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும்.

உலகுக்கு உரக்க சொன்னவர்
கூட்டாட்சி தத்துவத்துக்கு முன்னுரிமை அளித்தவர். மத்திய அரசின் மொழி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியவர். அனைத்து மொழிக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று முழங்கியவர். கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உலகுக்கு உரக்க சொன்னவர் கருணாநிதி.

டெல்லியை கைப்பற்ற வேண்டும்
கருணாநிதி ஒரு பொதுதர்மவாதி. நவீன சிந்தனை கொண்ட மாமனிதர். என கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார் டெரிக் ஓ பிரையன். அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும். இன்னும் 200 நாட்களில் இதை நாம் செய்ய வேண்டும்.

சரியான அஞ்சலி
இந்தியாவின் எதிர்காலம் தமிழகத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ளது. கர்நாடகத்தில் உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதுதான் கருணாநிதிக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும்.

நான் ரெடி நீங்க ரெடியா
இதற்கு திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாங்கள் மேற்கு வங்கத்திலும் இதையே செய்வோம் என்ற அவர் நான் ரெடி நீங்க ரெடியா என தொண்டர்களை பார்த்து முழங்கினார். பிரையனின் இந்த பேச்சுக்கு திமுகவினர் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து கலைஞர் புகழ் வாழ்கவே என தனது உரையை நிறைவு செய்தார் டெரிக் ஓ பிரையன்.












Click it and Unblock the Notifications