கலைக்கப்பட்டது திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம்.. திமுகவுடன் கலந்தது!
சென்னை: திராவிட தெலுங்கர் முன்னேற்ற கழகம் கட்சியை கலைத்து விட்டு நூற்றுக்கணக்கானோர் நேற்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க... ஆள் ஆளுக்கு ஆதரவு கடிதம் கொடுத்து வருகின்றனர். நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் திமுக தலைவர்களை சந்திக்க அண்ணா அறிவாலயம் பக்கம் வந்து செல்வதால் தேனாம்பேட்டையில் கூட்டம் அலைமோதுகிறது.

ஆதரவு மட்டுமல்ல கட்சியை கலைத்துவிட்டு உங்களோடு இணைந்து கொள்கிறோம் என்று திராவிட தெலுங்கர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.காமாட்சி நாயுடு, திமுகவில் இணைந்து விட்டார். அவருடன் திதெமுக மாநில பொதுச்செயலாளர் என்.சந்திரபாபு நாயுடு, மாநில பொருளாளர் பிரசன்ன பாண்டியன், மாநில அமைப்பாளர் உதயகுமார் மற்றும் சென்னை மாவட்டத் தலைவர் டி.தேவராஜன், சென்னை மாவட்டச் செயலாளர் வி.துரைசிங்கம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
மாநிலம் முழுவதும் உள்ள திராவிட தெலுங்கர் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுகவில் இணைவார்கள் என்றும் செய்தியாளர்களிடம் பேசிய காமாட்சி நாயுடு கூறினார். மாநிலம் முழுவதும் திமுகவிற்கு பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாயுடு சமூக மக்களை கவருவதற்காக மன்னர் திருமலைநாயக்கர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அறிவித்தார் ஜெயலலிதா. விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதால் நாயுடு சமூக மக்கள் விஜயகாந்த் பக்கம் திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தெலுங்கர் கட்சியை கலைக்கவைத்து திமுகவில் இணைத்து விட்டார் ஸ்டாலின்.
இதனிடையே அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து உழைப்பாளர் கட்சி உள்பட 10க்கும் மேற்பட்ட அமைப்பினர் சந்தித்து தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தலித் கூட்டமைப்பில் உள்ள அகில இந்திய அம்பேத்கர் கழகம், மக்கள் தேசம் கட்சி, அம்பேத்கார் மக்கள் கழகம், அம்பேத்கார் மக்கள் கட்சி, தெருவோர குடிசை வாழ்வோர் முன்னேற்றச் சங்கம், அகில இந்திய மக்கள் விடுதலை முன்னணி, மக்கள் பாதுகாப்பு கூட்டணி, தமிழர் முன்னேற்றக்கழகம், இந்திய மக்கள் கட்சி ஆகியவை திமுகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்துள்ளன.
புதிய தலைமுறை கட்சி
அனைத்து இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு
முத்தரையர் முற்போக்குச்சங்கம்
வன்னியர் சங்கம்
உழைப்பாளர் கட்சி
இந்திய தேசிய கிருஸ்துவக்கட்சி
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை ஆகிய அமைப்பகளும் திமுகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்துள்ளன.
கடந்த சில நாட்களாகவே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுக்கும் அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தல் அதிமுகவிற்கு 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்தன. இம்முறை அந்த ஆதரவு நிலையில் இருந்து விலகியுள்ள பல அமைப்புகள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications